மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
புதுடெல்லி: மகளிர் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில் அவர், “இந்திய பெண்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. கனவு காணவும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு நாடு நிச்சயம் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த வீடியோவை டேக் செய்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இது காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரும் ஒரு நேர்மறையான செய்தியாகத் தெரிகிறது.
பெண்கள் விஷயத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மனநிலையில் ஒரு தெளிவான மாற்றம் தெரிகிறது. இனி, காங்கிரஸ் கட்சி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி கூறும்போது, “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா 2023-ம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஏற்கெனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
என்னுடைய கேள்வி என்னவென்றால், 3 ஆண்டுகள் கடந்தும் அது ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? இப்போது ஏன் அதை தேவையற்ற வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைக்க விரும்புகிறீர்கள்? 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அப்படியே அமல்படுத்துங்கள். தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.