ராகுல் காந்தி
புதுடெல்லி: கடந்த 3 மாதங்களில் வணிக சமையல் காஸ் விலை 81 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தலுக்குப் பிறகு விலைவாசி உயரும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன்.
இன்றைய தினம் வணிக சமையல் காஸ் சிலிண்டர் ரூ.993 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரே நாளில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுதான் தேர்தல் கட்டணம். கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 மாதங்களில் மட்டும் வணிக எல்பிஜி விலை ரூ.1,380 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது 81 சதவீதம் வரை விலை உயர்ந்திருக்கிறது.
வணிக எல்பிஜி விலை உயர்வால் டீ கடை, ஓட்டல், பேக்கரி, இனிப்புக் கடைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். முதல்கட்டமாக எல்பிஜி காஸ் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும். இவ்வாறு ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.