வாராணசி: தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லையெனில், எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலக வேண்டும் என்று பாஜக தலைவர் நிதின் நவீன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் நிதின் நவீன் வாராணசியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்மூலம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் டெல்லியில் உள்ள சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அராஜக மனநிலையுடன் உள்ளனர். அத்துடன், சமூகத்தில் விஷத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர்.
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் மீது கேள்வி எழுப்புவதன் மூலம், வெளிநாட்டு மனநிலை கொண்ட ராகுல் காந்தி ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார். ராகுலை எம்.பி.யாக தேர்வு செய்ததும் இதே தேர்தல் ஆணையம்தான். எனவே, தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லையெனில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும்.
ராகுல், பிரியங்காவுக்கு கண்டனம்
பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெல்லியில் இண்டியா கூட்டணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ராகுல் காந்தி பெண் போலீஸ் காவலரை தகாத முறையில் தொட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி போலீஸ் அதிகாரி ஒருவரை இடித்துத் தள்ளி உள்ளார். இவர்களின் இந்தச் செயல்பாடு, அவர்கள் முன்வைக்கும் ஆணாதிக்கத்தை ஒழிப்போம் என்ற முழக்கத்துக்கு முற்றிலும் முரணானது. நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற அராஜக சூழலை உருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் சாதாரண குடிமக்களோ, பொதுமக்கள் பங்கேற்க வில்லை” என்றார்.