புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய மோடியிடம் நீங்கள் சொல்லுங்கள், 30 வினாடிகளில் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிடுகிறோம் என வணிகர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நவம்பர் 1-ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிரான பேரணி நடைபெற உள்ளது. பண்டிகைக் காலம் என்பதால் இதனை ஒத்திவைக்குமாறு வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக டெல்லி தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் பிரிஜேஷ் கோயல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், ”தீபாவளி பண்டிகைக் காலத்தில் ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
தங்கம், வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ், உடைகள், பாத்திரங்கள் என ரூ.25,000 கோடிக்கு வணிகம் நடைபெறும். எனவே, நவம்பர் 10-க்குப் பிறகு பேரணியை வைக்க பரிசீலிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: டெல்லியில் உள்ள ஒவ்வொரு வணிகர் மீதும் நாங்கள் அன்பும், மரியாதையும் வைத்துள்ளோம்.
உங்கள் குரலுக்கு செவிமடுக்கிறோம். அரசாங்கம் மெட்ரோவை மூடியது, நமது சாலைகளை சீல் வைத்தது, நமது தலைநகரையே பூட்டியது. உங்கள் வாக்குகள் திருடப்பட்டால், நாளை உங்கள் கடை, சேமிப்பு, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என எதுவுமே பாதுகாப்பாக இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் என்னிடம் கோரிக்கை விடுப்பதற்கு பதிலாக, வாக்கு திருட்டு விவகாரத்தில் நான்காவது குற்றவாளியான தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த வேண்டும். அதை அவர் ஏற்றுக்கொண்டால் இந்த போராட்டங்கள் வெறும் 30 வினாடிகளில் முடிவுக்கு வந்துவிடும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.