புதுடெல்லி: டெல்லி போராட்டத்தில் காயமடைந்த இந்திய தேசிய மாணவர் சங்க பிரதிநிதிகளை (என்எஸ்யுஐ) நேற்று சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது வெறுப்புக்கு அன்பால் பதிலளிப்போம் என்று மாணவர்களுடன் இணைந்து ராகுல் சூளுரைத்தார்.
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நமது சிங்கப் பெண்ணான டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாணவி ஆதிராவை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். போராட்டத்தின்போது அவர் அடிபட்ட போதிலும் பயப்படவில்லை; அவருடைய இதயத்தில் எந்த வெறுப்பும் இல்லை. ஆதிரா ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துவிட்டார்.
கடந்த முறை கண் பார்வையை இழந்த ஒரு இளைஞரை உங்களுக்குக் காட்டினேன்; இப்போது இந்த மாணவி ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துள்ளார் என்பதை வேதனையுடன் தெரிவிக்கிறேன். நம் மீது வெறுப்பை காட்டியவர்கள் மீது நாம் அன்பால் பதில் கூறுவோம்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது தேசியக் கொடியை ஏந்தியதற்காக கைது செய்யப்பட்ட சிஜேபி தலைவர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. தேசியக் கொடியை ஏந்துவது குற்றமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் நடத்துவதற்கான இடத்திலிருந்து ஜந்தர் மந்தர் சமீபத்தில் நீக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அமைதியைச் சீர்குலைத்ததாகக் கூறி, தாஸ் மற்றும் ரங்கா ஆகிய இருவரையும் கைது செய்து நேற்று காலை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி திஹார் சிறையில் அடைத்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி முழக்கமிட்டபடி, தடுப்புகளைத் தாண்டி அனுமதிக்கப்படாத பகுதிக்குள் நுழைந்ததால் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.