

சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே
புதுடெல்லி: சிஜேபியின் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்டோபர் 16 அன்று மாலை 5 மணிக்கு டெல்லி சென்ட்ரல் பார்க்கில் மூவர்ணக் கொடியை ஏற்றும் போராட்டத்தில் பங்குபெறுவோம் என அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சவுரப் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். தேசியக் கொடியை ஏற்றுவது குற்றமல்ல.
எனவே, தேசபக்தர்களும் மூவர்ணக் கொடியை நேசிக்கும் அனைவரும் அக்டோபர் 16 அன்று மாலை 5 மணிக்கு டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்குக்கு தேசியக் கொடியுடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அங்கு நாம் தேசியக் கொடியை ஏற்றி, மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல என்பதை நிரூபிப்போம்.
டெல்லிக்கு வர முடியாதவர்கள், தங்கள் சொந்த நகரங்களில் மாலை வேளையில் மூர்வணக் கொடி பேரணிக்கு ஏற்பாடு செய்யுங்கள். மூவர்ணக் கொடி நமது பெருமை என்பதையும், அதை ஏற்றுவது குற்றமல்ல என்பதையும் அந்த சர்வாதிகாரிகள் தெரிந்து கொள்ளட்டும்.
இந்த அழைப்பை விடுத்த பிறகு நான் சிறையில் அடைக்கப்படலாம். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. மூவர்ணக் கொடி எனது பெருமை; அதை நான் நிச்சயமாக ஏற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.
சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டதன் பின்னணி:
மத்திய டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர், போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வேறு சில இடங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிஜேபி, கடந்த 13-ம் தேதி தடையை மீறி ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம் நடத்தியது. சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோர் ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை அசைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு காவலில் இருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, பிஎன்எஸ் பிரிவுகள் 223 (ஏ), 332, 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் கன்னாட் பிளேஸ் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. இதேபோல், நாடாளுமன்ற வீதி காவல்நிலையம் இவர்கள் மீது, 221, 115(2), 132, 121(1), 3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகிய மூவரும் சிறப்பு நிர்வாக நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, அவர்கள் விடுவிக்கப்பட்டால் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடலாம் அல்லது மற்றவர்களை அவ்வாறு செய்யத் தூண்டலாம் என்பதை கருத்தில் கொண்டு சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நிர்வாக நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், அஜிங்கியா ஷிண்டே, ரூ.5,000 மதிப்பிலான தனிப்பட்ட பிணை மற்றும் ஜாமீன் பத்திரம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து, ஆறு மாதங்களுக்கு அமைதியாகவும் நன்னடைத்தையுடனும் இருப்பேன் என உறுதியளித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.