இந்தியா

நாடு முழுவதும் போராட்டங்களை ஒருங்கிணைக்க இணையப் பக்கம் - ராகுல் காந்தி அறிமுகம்

மோகன் கணபதி

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைக்க ‘சத்தியாகிரகா’ என்ற டிஜிட்டல் பக்கத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிமுகப்படுத்தி உள்ளார்.

மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ள ராகுல் காந்தி, இந்த தளத்தில் மக்கள் தங்கள் போராட்டங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். உண்மையை ஒடுக்கவிடாமல் பாதுகாப்பது தனது பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளா்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாடு முழுவதும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், பெரும்பாலும் அவர்கள் தனித்துத்தான் போராடுகிறார்கள்.

இளம் தலைமுறையினர், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு போராட்டமும் அதற்கான வலிமையான காரணங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது தனிமனித குரலாக இருக்கும்போது அதை எளிதாக ஒடுக்கிவிட முடியும்.

இந்த போராட்டக் குரலை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியே சத்தியாகிரகா (rahulgandhi.in/satyagraha).

உண்மையே நமது மிகப் பெரிய ஆயுதம் என்று மகாத்மா காந்தி நமக்கு கற்றுக் கொடுத்தார். ஆனால், உண்மையின் பக்கம் நின்று ஒன்றிணைந்து செயல்படுவதே அதைவிடவும் வலிமையான ஆயுதமாகும்.

நீங்கள் ஏதேனும் அநீதிக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தால், உங்களுக்கு நேர்ந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.

உங்கள் பிரச்சினை சத்தியாகிரகா இணையதளத்தில் இடம்பெறும். உங்களைப் போலவே வேறு யார் யாரெல்லாம் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

நாடாளுமன்றத்திலோ, வீதிகளிலோ, கடிதங்கள் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ நான் உங்களுக்குத் துணையாக நிற்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். எதிர்க்கட்சித் தலைவராக அது எனது பொறுப்பு’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT