இடது: ராகுல் காந்தி | வலது: பியூஷ் கோயல்

 
இந்தியா

ராகுல் காந்தி Vs பியூஷ் கோயல்: அமெரிக்க ஒப்பந்தத்தால் இந்திய ஜவுளித் தொழிலுக்கு பாதிப்பா?

மோகன் கணபதி

மும்பை: அமெரிக்காவுக்கான ஜவுளி ஏற்றுமதியில் பாதி 0% வரியில் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், மீதி 18% வரியில் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் நமது நாட்டின் பருத்தி விவசாயிகளுக்கும் ஜவுளித் துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இதற்கு பதில் அளித்தார். பியூஷ் கோயல் கூறியது: “ராகுல் காந்திக்கு பொருளாதாரம் குறித்து எந்த புரிதலும் இல்லை. சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை மட்டுமே அவர் வெளியிட்டு வருகிறார். உண்மையில் இருந்து அவர் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளார்.

          

இந்தியாவில் பருத்திக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. வரும் காலங்களில் அது மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் பருத்தி சாகுபடி திறன் மற்றும் தேவை இரண்டுமே வளரும். கச்சா பொருட்களை இறக்குமதி செய்து அதில் இருந்து ஏற்றமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றமதி செய்வது நீண்டகாலமாக உலகில் இருக்கும் நடைமுறை. இது ஒன்றும் புதிதல்ல.

நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறை ஒரு பிரகாசமான பங்கை வகிக்கிறது. மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட ரூ.3.60 லட்சம் கோடி அளவுக்கு நாம் ஜவுளி ஏற்றுமதி செய்கிறோம். வரும் காலத்தில் இது இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.

கடந்த சில மாதங்களில் இந்தியா மேற்கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஜவுளித் துறையின் பங்களிப்பு கிட்டத்தட்ட அரை ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும். இது சுமார் ரூ.45 லட்சம் கோடி. பல நாடுகளுக்கான ஜவுளி சந்தை நமக்கு திறக்கப்பட்டுள்ளதால் அது நமக்கு பலனளிக்கும்.

அமெரிக்கா மட்டும் ஆண்டுதோறும் ரூ.9 லட்சம் கோடி மதிப்புள்ள ஜவுளிப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகள் 50%-ல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஜவுளி ஏற்றுமதியில் பாதி பூஜ்ஜிய வரியில் ஏற்றுமதியாகும். மீதமுள்ளவை 18% வரியில் ஏற்றுமதியாகும்.

இதில், நமது நாட்டோடு போட்டியிடும் எந்த ஒரு நாட்டுடனும் ஒப்பிடும்போது நமக்கான வரி குறைவாகும். சீனா, வியட்நாம், வங்கதேசம், பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கான இறக்குமதி வரியை விட நமக்கான இறக்குமதி வரி குறைவு. அதோடு, இது இந்தியாவுக்கு 30 ட்ரில்லியன் டாலர் சந்தையை திறந்துள்ளது. இது இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்துக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 480 மில்லியன் பவுண்டுகள் பருத்தியை உற்பத்தி செய்கிறது. இதன் மதிப்பு ரூ.1.25 லட்சம் கோடி. இதில், சுமார் ரூ.45,000 கோடி மதிப்புள்ள பருத்தியை அமெரிக்கா ஏற்றுமதி செய்கிறது. எனது யூகத்தின்படி இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி, இதைவிட அதிகம். எனவே, அமெரிக்க பருத்தி இந்திய விவசாயிகளின் நலன்களுக்கு சேதம் விளைவிக்காது” என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கூறியது என்ன?

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்ட ராகுல் காந்தி அதில், ‘‘18% வரி vs. 0% வரி. (அதாவது இந்தியாவுக்கு 18% வரி, வங்கதேசத்துக்கு 0% வரி) பொய் சொல்வதில் வல்லுநர்களான பிரதமரும் அவரது அமைச்சரவையும் இந்த விஷயத்தில் எவ்வாறு குழப்புகிறார்கள் என்பதை நான் விளக்குகிறேன். அதோடு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் பருத்தி விவசாயிகளையும் ஜவுளி ஏற்றுமதியாளர்களையும் அவர்கள் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதையும் விளக்குகிறேன்.

வங்கதேசம் ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கு அமெரிக்கா 0% வரியை விதிக்கிறது. இதில் ஒரே நிபந்தனை அது அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதாகும். இந்திய ஆடைகளுக்கு அமெரிக்கா 18% வரி வதிக்கிறது. இது குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, “நாமும் அதே நன்மைகளைப் பெற விரும்பினால், நாமும் அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும்.” என்று ​மோடி அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சர் பதிலளித்தார். ஆனால், அதுவரை இந்த விவகாரம் ஏன் நாட்டு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது?

இது என்ன வகையான கொள்கை? உண்மையில் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறதா? “முன்னால் சென்றால் கிணறு, பின்னால் சென்றால் பள்ளம்” என்ற சூழ்நிலைக்குள் நம்மை சிக்க வைக்கும் ஒரு பொறியா?

நாம் அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்தால், நமது சொந்த விவசாயிகள் அழிந்து போவார்கள். நாம் பருத்தியை இறக்குமதி செய்யாவிட்டால், நமது ஜவுளித் தொழில் அழிந்து போகும்.

ஜவுளித் தொழிலும், பருத்தி சாகுபடியும் இந்தியாவின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அவற்றைச் சார்ந்துள்ளது. இந்தத் துறைகளை சேதப்படுத்துவது என்பது கோடிக்கணக்கான குடும்பங்களை வேலையின்மையிலும், பொருளாதார நெருக்கடியிலும் தள்ளிவிடும்.

தொலைநோக்குப் பார்வையும் தேசிய நோக்கமும் கொண்ட அரசாங்கமாக இருந்திருந்தால், பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருவரின் நலன்களையும் பாதுகாக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கும்.

ஆனால் இதற்கு நேர்மாறாக, மோடியும் அவரது அமைச்சர்களும் இரு துறைகளுக்கும் ஆழமாக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்’’ என தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT