அசாம் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கோலாகாட் பகுதியில் தனக்கு வரவேற்பு அளித்த பழங்குடியினருடன் கலந்துரையாடினார்.
விஸ்வநாத்: அசாம் மாநிலத்தின் விஸ்வநாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: அசாம் மாநில நலன், தேயிலை தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம், மக்களுக்கு எஸ்டி அந்தஸ்து போன்ற வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை.
முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் பாஜகவினர் மக்களை பிரித்து ஊழலில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் அதிகமாக ஊழல் செய்யும் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாதான். அவர் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்து மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்.
அசாம் தலைவர்கள் ஸ்ரீமந்த சங்கர்தேவ், கோபிநாத் பர்தோலாய், பூபென் ஹசாரிகா, அசன் பிர், ஜுபின் கார்க் போன்ற தலைவர்கள் எல்லாம் மக்களிடையே வெறுப்பை பரப்பவில்லை. அவர்கள் மக்களை ஒன்றிணைக்க பணியாற்றினர்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களை ஒன்றிணைத்து மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 6 பிரிவினருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்கும். தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.450 தினக்கூலி வழங்குவோம். பெண்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் நிதியுதவி அளிக்கப்படும்.
பெண்கள் தொழில் தொடங்க ரூ.50,000 வழங்குவோம். அனைத்து குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மதிப்பில் சுகாதார காப்பீடு வழங்குவோம். முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,250 உதவித் தொகை வழங்குவோம்.இவ்வாறு ராகுல் கூறினார்.