புதுடெல்லி: மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், ஆனால் அவரே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பறக்கிறார் என்று ராகுல் கூறியுள்ளார்.
உ.பி.யின் ரேபரேலியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: வெளிநாடு செல்லாதீர்கள், தங்கம் வாங்காதீர்கள், மின்சார வாகனங்களை வாங்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால் அவரே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் வெளிநாடு செல்கிறார்.
தேர்தலுக்கு முன் பெட்ரோல், எரிவாயு பற்றாக்குறை இல்லை என்று கூறப்பட்டது. பெட்ரோல் விலை உயராது என்றும் கூறப்பட்டது. இன்று பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. அம்பானி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பெட்ரோலை ஏற்றுமதி செய்கிறார். அம்பானி ரஷ்யாவிலிருந்து பெட்ரோலை வாங்கி, அதை வெளிநாடுகளில் விற்கிறார்.
அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிதி அளிக்கிறார்கள். இதுவே உண்மை. இந்தியாவின் பொருளாதார அமைப்பை அம்பானி, அதானி மற்றும் அமெரிக்காவிடம் அவர் ஒப்படைத்துவிட்டார். இப்போது ஒரு பொருளாதாரப் புயல் வரவிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியாலும் இந்திய அரசாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.
இதில் எங்கள் தவறு ஏதுமில்லை என்று அவர்கள் அழுதுகொண்டே கூறுவார்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்தத் தவறு பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் மட்டுமே உள்ளது. ஏனெனில் அவர்கள் அரசியலமைப்பை அழித்துவிட்டார்கள். வரும் காலங்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றன.
முன்னெப்போதும் இல்லாத கடுமையான பணவீக்கம் நாட்டில் ஏற்படப்போகிறது. அனைத்துப் பொருட்களின் விலை உயரும். நாட்டில் உரப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் நின்றுபோகும். இவ்வாறு ராகுல் பேசினார்.