புதுடெல்லி: டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய வணிக உலகம் என்பது மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டுப் பொருட்கள் அல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து எந்த ஒரு வணிக தலைவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
இன்னும் எவ்வளவு காலம் இவ்வாறு மவுனமாக இருக்கப் போகிறீர்கள்? அவர்கள் உங்களை முழுமையாகக் கையகப்படுத்தும் வரை காத்திருக்கப் போகிறீர்களா?
இந்திய வணிக உலகம் என்பது மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல. உங்களிடம் துணிச்சல் இல்லை. ஆனால், எங்களிடம் இருக்கிறது. இந்த அநீதிகளக்கு நாங்கள் நீதியை பெற்றுத் தருவோம்’ என தெரிவித்துள்ளார்.
பின்னணி: இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப் பெரிய தொழில் குழுமமான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் 2017-ல் பொறுப்பேற்றார். அவருடைய தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், சந்திரசேகரனின் பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் வாரியக் குழு கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை டாடா சன்ஸ் வாரியக் குழு தொடங்கியது. இந்நிலையில், மும்பையில் செப்.17-ல் நடைபெற்ற டாடா சன்ஸ் வாரியக் குழுக் கூட்டத்தில், அதன் தலைவராக சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதற்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66% பங்குகளைக் கொண்டுள்ள டாடா அறக்கட்டளை, சந்திரசேகரனின் நியமனத்துக்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரை மீண்டும் நியமித்தது சட்டவிரோதமானது என்று தெரிவித்தது.
மேலும், “ஒரு தலைவரின் நியமனத்துக்கு, அறக்கட்டளையின் நியமன இயக்குநர்களில் பெரும்பான்மையானோர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகள் கூறுகின்றன.
இந்த நிபந்தனை முதல் நியமனத்துக்கும், மறு நியமனத்துக்கும் பொருந்தும். அறக்கட்டளையின் நியமன இயக்குநர்களில் ஒருவரான நோயல் டாடா, பதவி நீட்டிப்பு தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததால், அந்த நியமனம் சட்டப்படி செல்லாது” என்றும் தெரிவித்திருந்தது.
இந்த பின்னணியில், ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.