ராகுல் காந்தி
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், மாணவர்கள் மீது போலீஸார் அடக்குமுறையை கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பும் மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது டெல்லி போலீஸார் நடத்தும் வன்முறைகள் எல்லையைத் தாண்டிவிட்டன. பாலியல் துன்புறுத்தல், ஆடைகளைப் பிடித்து இழுத்தல் உள்ளிட்ட அத்துமீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
போராட்டக்காரர்களின் குரல்களை ஒடுக்குவதற்கான சதியின் ஒரு பகுதிதான் இவை அனைத்தும். மீண்டும் யாரும் கேள்வி கேட்கத் துணியாத வகையில், மக்களை அச்சுறுத்தி, மிக மோசமாக அவமானப்படுத்துவதே இதன் நோக்கம்.
அதிகாரம் தங்கள் கைகளிலிருந்து நழுவும் நாளில், தங்களது தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு முடிவு வந்துவிடும் என்பது பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷாவுக்குத் தெரியும். அந்த அச்சம்தான் போலீஸார் வழியாக வெளிப்பட்டு, நாட்டின் இளைஞர்கள், பெண்கள் மீது வன்முறையாகக் கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று கூறியுள்ளார்.” என்று கூறியுள்ளார்.