புதுடெல்லி: எஸ்ஐஆர் குறித்து மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் தொடங்கியது. அப்போது வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச விரோத செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பான விவாதம் நேற்று தொடங்கியது.
காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி விவாதத்தை தொடங்கி வைத்து பேசும்போது, “தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சேர்க்க வேண்டும்.
எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள சட்டப்பூர்வமாக எந்த அனுமதியும் இல்லை. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, “காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரியின் கருத்துகளை ஆமோதிக்கிறேன். அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில்கூட வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்றார்.
பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் பேசும்போது, “கடந்த 1947-ம் ஆண்டில் முதல்முறையாக வாக்கு திருட்டு நடைபெற்றது. அப்போது ஒட்டுமொத்த காங்கிரஸ் கமிட்டியும் சர்தார் படேலுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் நேரு பிரதமராக நியமிக்கப்பட்டார். இதைவிட பெரிய வாக்கு திருட்டு எதுவுமே இருக்காது’’ என்றார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்கின்றனர். உலகில் வேறு எந்த பிரதமரும் இதுபோன்று செயல்படுவது கிடையாது. அனைத்து அரசு அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக மட்டுமே பேச வேண்டும். எந்தவொரு அமைப்பையும் குற்றம் சாட்டக்கூடாது’’ என்றார்.
பாஜக எம்பிக்கள் அனைவரும் ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து கோஷமிட்டனர். இதற்கு நடுவே ராகுல் காந்தி பேசும்போது, ‘‘தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? தற்போது தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்கின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு மதிப்பு கிடையாது. தலைமைத் தேர்தல் ஆணையரை மத்திய அரசு இயக்குவது எந்த வகையில் நியாயம் ஆகும்? தேர்தல் நிறைவடைந்த உடன் 45 நாட்களுக்கு பிறகு சிசிடிவி பதிவுகள் அழிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் என்ன? எனது கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். தேர்தலின்போது வாக்கு திருட்டு நடைபெறுகிறது. இது மிகப்பெரிய தேச விரோத செயல். தேர்தல் ஆணையத்தை சீர்குலைத்து இந்திய ஜனநாயகத்தை பாஜக அரசு கேள்விக்குறியாக்கி வருகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.