புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இரண்டாவது ஆண்டாகப் புறக்கணித்துள்ளனர்.
கடந்த 2024-ல் டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வழக்கமான முதல் வரிசைக்கு பதிலாக 5-வது வரிசையிலும், அதைத் தொடர்ந்த குடியரசு தின விழாவில் 3-வது வரிசையிலும் இருக்கை ஒதுக்கப்பட்டது.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முன்வரிசையில் இடமளிப்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கமளித்தது. கேபினட் அமைச்சர் அந்தஸ்து மற்றும் முன்னுரிமை அட்டவணையின்படி 7-வது இடத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவையும் ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் புறக்கணித்தனர். கடந்த ஆண்டைப் போலவே முன் வரிசையில் இடம் ஒதுக்காததே இதற்குக் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, பிரதமரின் உரையில் இடம்பெற்ற ஒரு கூற்றை (திமாகி நக்சல்) மேற்கோள் காட்டி இந்நிகழ்வைப் புறக்கணித்த எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது, “காடுகளில் ஆயுதமேந்திய நக்சல்களை ஒழிப்பதில் வெற்றியடைந்துள்ளோம். ஆனால் ‘திமாகி நக்சல்கள்’ (சிந்தனை நக்சல்கள்) வன்முறையையும், அமைதியின்மையையும் உருவாக்க வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அறிவுசார் நக்சல்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.