சண்டிகர்: பஞ்சாபில் ஒரு அரசு அதிகாரியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மாநிலக் கிடங்கு கழக மேலாளர் ககன்தீப் சிங் ரந்தாவா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ரந்தாவா பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. அதில், தான் விஷம் அருந்திவிட்டதாகவும், அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தரன் தரன் மாவட்டத்தில் உள்ள பட்டி தொகுதி எம்எல்ஏ.வான புல்லர், தனது முகநூல் பதிவில், ‘‘என் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எனது கட்சி எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும். எனவே என் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த விசாரணை முடியும் வரை, எனது ராஜினாமாவை ஏற்குமாறு கட்சியையும் முதல்வரையும் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவி விலகுமாறு அமைச்சரை கேட்டுக் கொண்டதாக மான் கூறினார்.
புல்லரின் ராஜினாமா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மான், ‘‘இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது விசாரணையில் தெரிய வரும். விசாரணைக்கு முன்னதாகவே அமைச்சரின் ராஜினாமாவை நாங்கள் பெற்றுக் கொண்டோம். இதனால் விசாரணையில் யாரும் தலையிடவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ முடியாது’’ என்றார்.
இதுகுறித்து சிரோமணி அகாலி தளத் தலைவர் பிக்ரம் சிங் மஜித்தியா கூறும்போது, ‘‘புல்லர் தனது உதவியாளருக்கு டெண்டர் வழங்குமாறு ரந்தாவாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதையடுத்து, ரந்தாவா அமைச்சர் வீட்டுக்கு அழைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். மேலும் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.