ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை செலுத்தும்படி பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததால் 17 வயது் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 5% மட்டுமே கட்டணத்தை உயர்த்தும் வகையில் உச்ச வரம்பு நிர்ணயித்து மாநில அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களுக்கான அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசர சட்ட திருத்தம்’ உடனடியாக அமலுக்கு வருகிறது. தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற கட்டணம் பெற்றோர்களுக்கு சிரமமாக உள்ளது. இதை ஒழுங்குப்படுத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி தனியார் பள்ளிகள் கடந்த 4 ஆண்டுகளாக வசூலித்த கல்விக் கட்டண விவரங்களை தெரிவிக்க வேண்டும். கல்விக் கட்டண உயர்வு ஆண்டுக்கு 5 % என்ற அளவிலேயே இருக்க வேண்டும். 15 சதவீதத்துக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்த பள்ளிகள், கூடுதல் பணத்தை பெற்றோருக்கு திருப்பிச் செலுத்த வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 7,800 தனியார் பள்ளிகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
புதிய ஒழுங்கு முறை சட்டம் மூலம் சுமார் 32 லட்சம் பெற்றோர் பயனடைவர். விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறை மீறும் பள்ளிக்கு ரூ.50,000 அபராதமும், 2-வது முறையாக மீறும் பள்ளிக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அவசர சட்ட விதிமுறைகளை மீறினால் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.