புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் புனே நகராட்சிக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். கவுன்சிலர் பதவியை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்பதற்காக அவர்கள் இலவசங்களை அள்ளித் தெளிக்கின்றனர்.
குறிப்பாக லோகான் - தனோரி வார்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், 11 பேருக்கு 1,100 சதுர அடி நிலம் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கான முன்பதிவும் தொடங்கி விட்டது.
விமான் நகர் வேட்பாளர் தம்பதிகளுக்கு 5 நாள் இலவச தாய்லாந்து சுற்றுலாவை அறிவித்துள்ளார். அனைத்து செலவுகளையும் தானே ஏற்பதாக அந்த வேட்பாளர் கூறியுள்ளார். தவிர மற்ற வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், குலுக்கல் முறையில் வாக்காளர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். தங்க நகை தருவதாக இன்னொருவர் கூறியுள்ளார்.
குடும்பப் பெண்களை கவர, பைத்தானி மற்றும் பட்டு ரக கண்கவர் சேலைகளை விநியோகித்து வருகின்றனர். அத்துடன் தையல் இயந்திரம், சைக்கிள் போன்றவற்றையும் வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். இளைஞர்களின் வாக்குகளை கவர ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் ‘கிரிக்கெட் போட்டி’ நடத்துகிறார் ஒரு வேட்பாளர்.
இதற்கிடையில், ஆளும் மகாராஷ்டிர அரசில் இடம்பெற்றுள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் 40 முதல் 45 இடங்களை சரத்பவாரின் தேசியவாத கட்சி கேட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், 30 இடங்களை ஒதுக்க அஜித் பவார் ஒப்புக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எதிரெதிராக இருந்த உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த புதன்கிழமை ஒன்றிணைந்துள்ளனர்.
சுப்ரியா சுலே தகவல்: தேசியவாத கட்சி காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி.சுப்ரியா சுலே கூறியதாவது:மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக கூட்டணிக்கான அனைத்து வழிகளையும் பரிசீலித்து வருகிறோம். சித்தாந்தத்தை கைவிடவில்லை என்று அஜித் பவார் தொடர்ந்து கூறி வருகிறார். எனவே, அவருடனான கூட்டணிக்கும் தொடர்ந்து நாங்கள் பேசி வருகிறோம். ஆனால் எந்த முடிவோ அல்லது இறுதி திட்டமோ இதுவரை வரையறுக்கப்படவில்லை.இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.