புதுடெல்லி/பெங்களூரு: எஸ்ஐஆர் தொடர்பாக, இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பொது கண்டன விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீஸார் அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி இல்லத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி பொது கண்டன விசாரணை நடைபெற உள்ளது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரையன், சமாஜ்வாதி மூத்த தலைவர் ஹரேந்திர மாலிக், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மஹுவா மாஜி, சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெங்களூருவில் இருந்த காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்துக்குப் பிறகு மல்லிகார்ஜூன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குத் திருட்டில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். வெள்ளிக்கிழமை ‘மாதிரி நாடாளுமன்றம்’ நிகழ்வும், நவம்பர் 1-ம் தேதி பிரம்மாண்ட கண்டன பேரணியும் நடத்துகிறோம். இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்" என்றார்.