பிஹார் அரசு தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து தலைநகர் பாட்னாவில் டாக் பங்களா சந்திப்பு அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து கலைத்தனர்.படம்: பிடிஐ
பாட்னா: பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) 70-வது தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் உள்ள முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் இல்லத்தை முற்றுகையிட நேற்று பேரணி சென்றனர். அப்போது, மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.
பிஹார் மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 70-வது தேர்வு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அந்த தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாகத் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் மாணவர்கள் பேரணி தொடங்கினர்.
முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் இல்லத்தை நோக்கி மாணவர்கள் செல்வதைத் தடுக்க வழியெங்கும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும், மாணவர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு முன்னேற முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து, பல இடங்களில் போலீஸார் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்.
போலீஸாரின் இந்த நடவடிக்கையையும் மீறி மாணவர்கள் முதல்வர் இல்லத்தின் அருகே முற்றுகையிட சென்றனர். இதையடுத்து பல போராட்டக்காரர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
பிபிஎஸ்சி - டிஆர்இ 4 தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். பணி நியமன செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். பிஹார் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் இந்தி வழித் தேர்வு எழுதுபவர்களுக்குச் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்னாவின் கர்தானிபாக் பகுதியில் மாணவர்கள் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர் பிரதிநிதிகள் கூறும்போது, “எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இளநிலை அதிகாரிகளை அரசு நியமிப்பதால் பிரச்சினை முடிவுக்கு வருவதில்லை. முதல்வர் சாம்ராட் சவுத்ரி அல்லது கல்வி அமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்” என்றனர்.