ஸ்ரீநகர்: ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் ராணுவப் பார்வையாளர்கள் குழுவின் தலைமையகம் முன் கருப்பு கொடி ஏந்தியபடி திரண்ட மக்கள், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதுபோல பண்டிபோரா பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே வேலை நிறுத்த போராட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி வெளியிட்ட அறிக்கையில், “காமேனியைக் கொன்றது குறித்து இஸ்ரேலும் அமெரிக்காவும் தற்பெருமை பேசுகின்றன. மனசாட்சியை விட வசதியையும் சுயநலத்தையும் தேர்ந்தெடுத்த முஸ்லிம் நாடுகளின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆதரவு மிகவும் அவமானகரமானது" என கூறியுள்ளார்.