ராகுல், பிரியங்காவுடன் ரெஹான்

 
இந்தியா

வகுப்புத் தோழியை கரம் பிடிக்கிறார் பிரியங்கா காந்தியின் மகன் ரெஹான்!

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி,யான பிரியங்கா காந்தி வதேராவின் மகன் ரெஹானின் திருமணம் நிச்சயம் செய்யப்படவுள்ளது. இவர், டெல்லியின் தனது வகுப்புத் தோழியான அவியா பெய்க்கை மணக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வதேராவுக்கு ரெஹான் (24) என்ற மகனும், மிரய்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மகன் ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத் தோழியான அவிவா பெய்கை மணக்கிறார்.

இவர்கள் இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வருவதாகத் தெரிகிறது. அவிவாவின் தந்தை இம்ரான் டெல்லியின் தொழில் அதிபர். தாயான நந்திதா பெய்க் பிரபல டிசைனரான உள்ளார்.

அவிவாவும், ரெஹானைப் போலவே ஒரு புகைப்படக் கலைஞர். மேலும், கால்பந்து வீராங்கனையாகவும் இருந்த அவிவா, தேசிய அளவிலானப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இரு குடும்பத்தினரும் திருமண நிச்சயதார்த்த விழாவை தனிப்பட்ட முறையில் ராஜஸ்தானின் ரத்தம்போரில் நடத்த உள்ளனர், இந்நிகழ்ச்சிக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிச்சயதார்த்தத் தகவல், பிரியங்கா குடும்பத்தின் உயர்மட்ட வட்டாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களின்படி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மகன் ரெஹான் வத்ரா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

இந்த திருமண உறவை இரு குடும்பத்தினரும் ஏற்றபின் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதை இரு குடும்பத்தினரும் இணைந்து முடிவு செய்ய உள்ளனர்.

பிரியங்கா காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆவார். அவரது மூத்த சகோதரர் ராகுல் காந்தி அந்தப் பதவியை ராஜினாமா செய்த பிறகு நடந்த இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேச பஞ்சாபியான அவரது கணவர் ராபர்ட் வதேரா ஒரு தொழிலதிபர். அவிவாவின் தாயான நந்திதா பெய்க்கும் பிரியங்கா காந்தியும் நீண்டகால நண்பர்கள்.

காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனின் உள்துறை வடிவமைப்பில் அவர் பிரியங்கா காந்திக்கு உதவியுள்ளார். டெல்லியின் ஆரம்பக் கல்வியை முடித்த ரெஹான் தனது உயர் கல்வியை டெகர்டூனிலும், லண்டனிலும் பயின்றவர்.

தனது தாய் பிரியங்காவின் அரசியல் சுற்றுப் பயணங்களிலும் ரெஹான் அடிக்கடி காணப்படுகிறார். இருப்பினும், அவர் அரசியலில் இருந்து விலகியே இருக்கிறார். இவருக்கு அரசியலில் இன்னும் ஆர்வம் ஏற்படவில்லை எனக் கருதப்படுகிறது. ரெஹான் 'டார்க் பெர்செப்ஷன்' என்ற தலைப்பில் ஒரு தனி புகைப்படக் கண்காட்சியை நடத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT