

அமித்ஷா
கொல்கத்தா: “மேற்கு வங்கத்தின் வளர்ச்சி நின்றுவிட்டது. மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல நலத்திட்டங்கள் இங்கே முடக்கப்பட்டுள்ளன. பயமும் ஊழலும் மேற்கு வங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டன” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித் ஷா, “அடுத்து நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம், அதுதான் எங்கள் இலக்கு. 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி மற்றும் இப்போது பிஹாரில் அரசாங்கங்களை அமைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்த தேர்தல் ஊடுருவல் பிரச்சினையின் அடிப்படையிலேயே நடத்தப்படும். ஊடுருவல் என்பது இனி மேற்கு வங்கத்திற்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. அது இப்போது தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடையது.
அசாம், திரிபுரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் ஊடுருவல் நின்றுவிட்டது. ஆனால், ஊடுருவல்காரர்களால் மேற்கு வங்கத்தின் மக்கள்தொகை அமைப்பு மாறிவிட்டது. ஊடுருவல்காரர்களால் மேற்கு வங்கமும் அதன் கலாச்சாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
இதில் மேற்கு வங்க அரசுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா?. ஊடுருவல்காரர்களுக்கு யார் ஆவணங்களைத் தயாரித்துக் கொடுக்கிறார்கள்? நாட்டின் எந்தப் பகுதியில் பிடிபட்ட ஊடுருவல்காரராக இருந்தாலும், அவர்களது ஆவணங்கள் மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்பட்டவையாகவே உள்ளன. ஊடுருவல்காரர்களை எந்த விலை கொடுத்தாவது பாதுகாப்பதை திரிணமூல் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டின் முதல் மின் உற்பத்தி நிலையம், முதல் கார் உற்பத்தி ஆலை, முதல் எஃகு ஆலை, நாட்டின் முதல் உயரமான கட்டிடம், முதல் சணல் ஆலை, முதல் மெட்ரோ ரயில் ஆகியவை மேற்கு வங்கத்தில்தான் தொடங்கப்பட்டன. இவற்றில் எதுவும் மம்தாஜியின் ஆட்சியில் நடக்கவில்லை. அவரது ஆட்சிக்காலத்தில் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் சிண்டிகேட் கட்டுப்பாடு காரணமாக 7,000 நிறுவனங்கள் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறிவிட்டன. மேற்கு வங்கம் பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் உள்ளது.
மம்தா பானர்ஜி அரசாங்கம் ஏன் மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் அனுமதிக்க மறுக்கிறது. மெட்ரோ ரயில்கள் காற்றில் ஓடவைக்க முடியாது. நிலம் வழங்குவது மாநிலத்தின் பொறுப்பு. தமிழ்நாடு, தெலங்கானா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிலம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்ற மாநிலங்களில் பிரதமர் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைக்க வரும்போது, எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட கலந்துகொள்கிறார்கள். இங்கு, மம்தா மேடையைக் கூட பகிர்ந்து கொள்ள மாட்டார். அவர் எதற்காக இவ்வளவு பயப்படுகிறார்?.
மேற்கு வங்கத்தின் வளர்ச்சி நின்றுவிட்டது. மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல நலத்திட்டங்கள் இங்கே முடக்கப்பட்டுள்ளன. பயமும் ஊழலும் மேற்கு வங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டன.
மம்தாவின் அமைச்சர்களில் ஒருவரிடமிருந்து ஏன் 27 கோடி ரூபாய் மீட்கப்பட்டது என்பதற்கு அவர் பதிலளிப்பாரா? மேற்கு வங்கம் போன்ற ஒரு ஏழ்மையான மாநிலத்தில், கோடிக்கணக்கான ரூபாய் திரிணமூல் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் கண்டெடுக்கப்படுகின்றன. ஆனால் அவர் ஊழலே இல்லை என்று கூறுகிறார்? இந்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் பெண்கள் இரவு 7 மணிக்கு மேல் தங்கள் விடுதிகளிலிருந்து வெளியே வர முடியாதா?. நாம் முகலாயர் காலத்தில் வாழ்கிறோமா? பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்குவது நமது அரசியலமைப்புச் சட்டக் கடமையாகும். ஆர்.ஜி.கர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு, துர்காபூர் மற்றும் தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி பாலியல் வன்கொடுமை வழக்குகளின் குடும்பத்தினரும் இந்த திறமையற்ற அரசாங்கம் பதவி விலகுவதற்காகக் காத்திருக்கிறார்கள்” என்று கூறினார்