வயநாடு: ராமர் கோயிலுக்காகத் திரட்டப்பட்ட நன்கொடை திருடப்பட்டதாக கூறப்படுவது மிகவும் துயரமானது, வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி கூறினார்.
கேரள மாநிலம் வயநாடு எம்.பி. பிரியங்கா கடந்த வியாழக்கிழமை முதல் தொகுதியில் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அவர் நேற்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அயோத்தி ராமர் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். ஆனால் அவை தற்போது திருடப்பட்டதாக தெரிகிறது. இது மிகவும் துயரமானது மற்றும் வெட்கக்கேடானது என்று நான் கருதுகிறேன்.
என்ன நடந்தது, எப்படி நடந்தது, அது ஏன் நடந்தது என்பது குறித்து அரசு விசாரிக்க வேண்டும். மேலும் அந்தப் பணத்தை சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பானவர்களும் இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.