அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காகிதத்தில் ‘ஐ லவ் யூ’ என எழுதி சக மாணவி ஒருவர் மீது வீசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறுமி அந்தக் காகிதத்தை ஆசிரியரிடம் கொடுத்து அழுதபடியே புகார் கூறியுள்ளார். சீமா கோஸ்வாமி என்ற ஆசிரியர் முதலில் அந்தக் காகிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டு மாணவனைக் கண்டித்து அறிவுரை வழங்கி உள்ளார். இருப்பினும், சிறுமி தொடர்ந்து மனவேதனையில் இருந்ததால், இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, மாணவனின் தாயார் பள்ளிக்கு அழைக்கப்பட்டார். அவர் பள்ளி நிர்வாகத்தினருடன் பேசிவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் உறவினர்களுடன் மீண்டும் திரும்பி வந்து, தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டு உடலில் காயங்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து குடும்பத்தினர் அவசர ஆம்புலன்ஸை அழைத்து, மாணவனை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆசிரியர் சீமா கோஸ்வாமி மற்றும் பள்ளி இயக்குநர் இந்திரஜித் மவுர்யா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.