புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் தனியார் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தனியார் ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் பயிலும் மருத்துவ மாணவர்களும் ஓராண்டு காலத்துக்கு கிராமப்புறங்களில் பணியாற்றினால் மட்டுமே மருத்துவராக பதிவு செய்ய முடியும் என்ற அரசாணை கர்நாடக அரசால் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிராமப்புறங்களில் பணியாற்றுவதிலிருந்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஏன் விலக்களிக்கப்பட வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு, தனியார் ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்ந்து மிக அதிகக் கட்டணம் செலுத்தி மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின் கீழ் சேர்க்காமல் “தெளிவாக வேறுபடுத்திக் காணக்கூடிய ஒரு தனிப்பிரிவாக” கருதப்பட வேண்டும் என்றும், அவர்களை கிராமப்புறங்களில் கட்டாயப் பணி செய்ய வேண்டுமென்ற நிபந்தனைக்கு உட்படுத்தப்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கிராமப்புறங்களில் மருத்துவ மாணவர்கள் பணியாற்றுவதை கட்டாயமாக்க தேசிய அளவில் ஒரு சீரான கொள்கை இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாடு தழுவிய இத்தகைய கொள்கையை வகுப்பது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து உரிய அறிவுறுத்தல்களைப் பெற்றுத் தெரிவிப்பதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் வகையில் தேசிய அளவிலான சீரான கொள்கையை வகுப்பது குறித்து 3 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.