புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஓராண்டு காலம் கூட பதவியில் நீடிக்கமாட்டார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும், மோடி அரசு நிறுவன ரீதியான கிளர்ச்சியை எதிர்கொண்டு வருவதாகவும், இது குறித்த உள் விவரங்கள் தமக்கு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற ஆதிவாசி காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு என்பது சர்வதேசப் பொருளாதார அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளும் ஒரு 'அதிர்வுத் தாங்கி'யாக செயல்பட்டது. அந்த அமைப்பை பாஜக அகற்றிவிட்டது. இதனால் நாடு ஒரு பொருளாதார சுனாமியை எதிர்கொள்ள நேரிடலாம். விலைவாசி உயர்ந்து வருகிறது. வாழ்நாளில் நீங்கள் இதுவரை கண்டிராத மிகக் கடுமையான ஒரு பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க நேரிடும்.
தேர்தல் ஆணையம் முழுமையாக மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே அது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் எனக்கு தகவல்களை அனுப்பி வருகிறார்; உளவுத்துறை அமைப்பின் தலைவர், மூத்த நீதிபதிகள் என அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எங்களுக்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். இந்தியாவில் தற்போது நிறுவன ரீதியான கிளர்ச்சி நடைபெற்று வருகிறது.
கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளுக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கிறது. ‘மக்கள் அழுத்தம் மிகக் கடுமையாக இருக்கப்போகிறது; நாம் இதே பாதையில் தொடர்ந்து பயணித்தால், அது நமக்கே ஆபத்தாக முடியும்’ என்பதை அதிகாரிகள் உணர்ந்திருப்பதாலேயே இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறுவதை மக்கள் உணர்ந்து கோபமடைந்தால், தேர்தல் ஆணையம் அச்சமடையாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனினும், மக்களின் அழுத்தத்தை அடக்குவதற்காக அரசு நெருக்கடி நிலையைப் போன்ற ஒன்றை அமல்படுத்த முயற்சி செய்யக்கூடும். பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஓராண்டு காலம் கூட பதவியில் நீடிக்கமாட்டார்” என்று தெரிவித்தார்.