திருமலை: திருமலையில் நேற்று காலை ஏழுமலையானை தரிசித்த பிறகு வெளியே வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாதுகாப்பு வளையத்தை மீறி அங்குள்ள பக்தர்களுக்கு சாக்லெட் வழங்கினார்.
இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த வியாழக்கிழமை மாலை ரேணிகுண்டா வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆந்திர இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ராம்நாராயண ரெட்டி வரவேற்றார். இதையடுத்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு சென்று, முர்மு வழிபட்டார். இதைத் தொடர்ந்து காரில் திருமலைக்கு வந்த முர்முவை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு வரவேற்றார். இரவு திருமலையில் முர்மு தங்கினார்.
இந்நிலையில் நேற்று காலையில் அவர் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து, அவர் காரில் புறப்பட்டு வெளியே வரும்போது, ராம்பக்கீச்சா பேருந்து நிலையம் அருகே அவரை காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். உடனே காரை நிறுத்தச் சொன்ன முர்மு, பாதுகாப்பு வளையத்தை மீறி பக்தர்கள் அருகில் சென்று அவர்களுக்கு சாக்லெட் வழங்கினார்.