குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
புதுடெல்லி: “பொதுத் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை முற்றிலுமாகத் தடுப்பதும், தேர்வு முறையை இளைஞர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களின் நோக்கங்களாகும்.
அரசின் முன்முயற்சிகளாலும், வளர்ந்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் மூலமும், இளைஞர்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன” என்று 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
அந்த உரையின் முழு வடிவம்: “நம் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஒரு சில மணி நேரங்களில் நம் நாடு அதன் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. நாட்டு மக்களும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரும், இந்த தேசிய விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். நமது மூவண்ண தேசியக் கொடி, நம் நாட்டின் விடுதலையின் சின்னமாக விளங்குகிறது. அளப்பரிய பெருமிதத்துடன் நாம் அதை ஏற்றுகிறோம்.
1947 ஆகஸ்ட் 15 அன்று, அடிமைத்தளத்தில் இருந்து இந்தியத் தாய்க்கு விடுதலை அளிக்கப்பட்டது. அனைத்து குடிமக்களும் தங்கள் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதையும், உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை முன்னேற்றும் இலக்கை நோக்கி பணியாற்றுவதையும் உறுதி செய்வதிலேயே, சுதந்திரத்தின் உண்மையான பொருள் பொதிந்துள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், சுகாதாரச் சேவைகளை வழங்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் என அனைவரும் தங்கள் முயற்சிகள் மூலம் நாட்டைக் கட்டமைப்பதற்குப் பங்களித்து வருகின்றனர்.
திறமையான விளையாட்டு வீரர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள், தொலைநோக்குப் பார்வை கொண்ட அறிஞர்கள், தனியார் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள விடாமுயற்சியுடன் உழைக்கும் பணியாளர்கள், மக்களுக்குச் சேவை செய்ய தங்களை அர்ப்பணித்த மக்கள் பிரதிநிதிகள், நீதித்துறை அதிகாரிகள், கடமையுணர்வுள்ள அரசு ஊழியர்கள், நமது பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள், தன்னலமற்ற சமூக சேவகர்கள், தூய்மை இந்தியா இயக்கத்தின் முன்னணிப் பணியாளர்களான அனைத்து தூய்மைப் பணியாளர்களும் நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள எண்ணற்ற குடிமக்களும், நமது அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றும் ஒவ்வொரு குடிமகனும், நமது நாட்டைக் கட்டமைக்கும் பணியில் தீவிரப் பங்களிப்பாளர்களாகத் திகழ்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
முப்படைகள், ஆயுதக் காவல் படைகள், அனைத்துக் காவல் துறைப் பிரிவுகளையும் சேர்ந்த நமது வீரர்கள் மற்றும் பணியாளர்களின் அசைக்க முடியாத கடமை உணர்வையும் அர்ப்பணிப்பையும் நான் சிறப்பாகப் பாராட்டுகிறேன். அத்துடன், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையையும், கண்ணியத்தையும் உயர்த்தும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களையும், நமது தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன்.
2047-ம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். ஏழை மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வழி நடத்தப்படும் வளர்ச்சித்திட்டங்களின் பலன்கள் ஒவ்வொருவரையும் சென்றடையச் செய்வதே நமது உறுதிப்பாடாகும். நமது வளமான பாரம்பரியத்தையும் விடுதலை இயக்கத்தின் லட்சியங்களையும் தழுவி, நவீன வளர்ச்சிப் பாதையில் நாம் முன்னேறிச் செல்கிறோம். ‘நாட்டை விழிப்புணர்வுடனும் உயிர்ப்புடனும் பாதுகாப்போம்’ என்று பொருள்படும் “வயம் ராஷ்ட்ரே ஜாக்ரியம்” என்ற வேத வாக்கியம், தேசத்திற்கு சேவை செய்ய எப்போதும் தயாராக இருக்க நம்மை ஊக்குவிக்கிறது.
நமது சுதந்திரப் போராட்டத்தின் போது, பல்வேறு கொள்கைகளைக் கொண்ட மக்கள் 'இந்தியச் சுதந்திரம்' என்ற ஒரே பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைந்தனர். சுதேசி இயக்கத்தின் போது, 'வந்தே மாதரம்' பாடல் மக்களின் பாடலாக மாறியது. தேசப்பிதா மகாத்மா காந்தியின் தலைமையில் எண்ணற்ற இந்தியர்கள் நமது சுதந்திரப் போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர்.
சமூக சீர்திருத்தம், தேசபக்தி ஆகியவற்றின் மிக உயர்ந்த மாண்புகளின் அடையாளமாக பாபாசாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் திகழ்ந்தார். நம் நாட்டின் சுதந்திரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் வித்திட்ட கொள்கைகளுக்குச் சொந்தமான இந்தியத் தாயின் மகத்தான தவப்புதல்வர்களையும், புதல்விகளையும் வணங்குகிறேன்.
ஆகஸ்ட் 14 ஆன இன்று, ‘பிரிவினை கொடுமையின் நினைவு தினத்தை’ அனுசரிக்கிறோம். பிரிவினையின் விளைவாக ஏற்பட்ட வன்முறையில் தங்கள் உயிரை இழந்த அல்லது கட்டாய இடப்பெயர்வு என்ற துயரத்தை அனுபவிக்க நேர்ந்த லட்சக்கணக்கான இந்தியர்களை நாம் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். வகுப்புவாத வன்முறை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக மாற வேண்டிய சூழலும், பிரிவினையின் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இருப்பினும், அவர்கள் தங்கள் அடையாளத்தை ஒருபோதும் கைவிடவில்லை.
நாட்டின் விடுதலையின்போது, பிரிவினையால் ஏற்பட்ட மோசமான விளைவுகளுடன், 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை புதிய சுதந்திர இந்தியாவுடன் ஒன்றிணைக்கும் பெரும் சவாலும் எழுந்தது. சர்தார் படேல், மன்னராட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவந்து, அந்தச் சமஸ்தானங்களை நமது சுதந்திர ஜனநாயகக் கட்டமைப்புடன் இணைத்தார். நன்றியுணர்வுள்ள நாட்டு மக்களின் சார்பில், நவீன இந்தியாவின் ஒற்றுமையை வடிவமைத்த 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் படேலுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.
இந்திய மக்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு, மக்களின் பங்கேற்பு என்ற அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் தொட்டிலாகத் திகழும் நம் நாட்டு மக்களிடம், பங்களிப்பு உணர்வு எப்போதும் இயல்பாகவே இருந்து வருகிறது. இந்த மரபை, இப்போது நமது குடிமக்கள் புதிய உற்சாகத்துடன் முன்னெடுத்து வருகின்றனர். பொது மக்களின் தீவிரப் பங்கேற்புடன் தேசிய அளவிலான இயக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது நமது ஜனநாயகத்தின் ஒரு சிறப்பான ஊக்கமளிக்கும் சாதனையாகும்.
அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளில் சமத்துவம் ஆகியவற்றுடன், தனிமனித கண்ணியமும் நமது அரசியலமைப்பின் போற்றத்தக்க கோட்பாடுகளில் அடங்கும். இன்று, சாதாரணப் பின்னணியைக் சேர்ந்தவர்கள், பல்வேறு துறைகளிலும் போற்றத்தக்க பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர். இன்றைய இந்தியாவில், எவரும் பெரிய கனவுகளைக் காண்பதுடன், அவற்றை நனவாக்கவும் கூடும் என்ற எனது நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறது.
நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் பொறுப்புகளை நமது அரசியலமைப்பு தெளிவாக வரையறுத்துள்ளது. மக்களின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் எடுத்துரைப்பது, சட்டமன்றத்தில் உள்ள அவர்களது பிரதிநிதிகளின் கடமையாகும். நாடு, மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் கொள்கைகளைச் செயல்படுத்துவது நிர்வாகத் துறையின் பொறுப்பாகும்.
போதிய வளங்கள் இல்லாத காரணத்தால் எவருக்கும் நீதி வழங்கப்படாத நிலை ஏற்படாததை உறுதி செய்வது நீதித்துறை சார்ந்த ஒவ்வொருவரின் கடமையாகும். அனைத்துக் குடிமக்களுக்கும், குறிப்பாகச் சமூகத்தின் விளிம்புநிலை அல்லது பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும், கண்ணியத்துடன் கூடிய, சரியான நேரத்தில் கிடைக்கும் நீதியைப் பெறுவதில் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
சுமார் ஒரு தசாப்த காலத்தில், நமது நாடு விரைவான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி; பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை; பல தசாப்தங்களாக நீடித்திருந்த பல்வேறு வளர்ச்சித் தடைகளின் நீக்கம் ஆகியவற்றைச் சந்தித்துள்ளது.
நமது நாடு மகாத்மா ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. சமூக நீதி, கல்வி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சமத்துவம் ஆகியவற்றில் மகாத்மா பூலே மற்றும் கிராந்தி-ஜோதி சாவித்ரிபாய் பூலே ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி, கடந்த சில ஆண்டுகளாக, தேசிய அளவில் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் கல்வித் துறையில் புதிய அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய நிதி உள்ளடக்கத் திட்டமான ‘பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டத்தின்’ கீழ், சுமார் 59 கோடி பேர் வங்கிச் சேவையில் இணைந்துள்ளனர். இவர்களில் 32 கோடிக்கும் அதிகமானோர், பெண்கள் ஆவர். விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்’ கீழ், 60 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயம், பால்வளம், கோழி வளர்ப்பு, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 'விவசாயி கவுர நிதி' மற்றும் 'விவசாயி கடன் அட்டைகள்' ஆகியவை ஆதரவளித்துள்ளன.
வலுவான கலாச்சார அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் வளர்ச்சியே விரைவானதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்பதற்கு உலக வரலாறு சான்றாக உள்ளது. கலாச்சாரப் பெருமித உணர்வு, நாட்டின் மனவலிமையை வலுப்படுத்துகிறது என்பது குறித்த விழிப்புணர்வு இன்று நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. கல்வி, அறிவியல், கலை, கலாச்சாரம், ஆன்மிகம், நன்னெறி சார்ந்த வாழ்வியல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வளமான மரபை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். நமது பாரம்பரியத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து நாம் முன்னேறுகிறோம்.
உலகின் மிகப்பெரிய, ஆகச்சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. தற்போது கிராமப்புறங்களில் உள்ள சிறிய கடைகள், சாலையோர வியாபாரிகளிடம் கூட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன. உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை, இந்தியாவில் நடைபெறுகின்றன. நாட்டு மக்களும் அரசும் இணைந்து, டிஜிட்டல் புரட்சிக்கான ஒரு முன்னுதாரணத்தை உலக நாடுகளின் பார்வைக்கு வைத்துள்ளன. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நலத்திட்டங்களின் பலன்களை அரசு மக்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்கியுள்ளது.
நெடுஞ்சாலைகள், நீர்வழிகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நம் நாட்டில் விரிவடைந்துள்ளன. இது, புதிய தொழில் முயற்சிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் போர்களும், நிலையற்ற தன்மையும், ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கின்றன. இத்தகைய சவாலான சூழலிலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக நமது பொருளாதாரம் முன்னேறி வருகிறது. பொருளாதாரக் கணிப்புகளின்படி, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம், உலகளாவிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விட இருமடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தற்சார்பு இந்தியா இயக்கம்’, நமது பொருளாதார முன்னேற்றம், நாட்டின் பாதுகாப்பிற்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நவீன வளர்ச்சியின் பாதையில் முன்னேறிச் செல்லும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. '2030-ம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளில்' சிலவற்றை நமது நாடு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, இதுவரை இல்லாத வேகத்தில் வளர்ச்சியை சந்தித்துள்ளது.
நாட்டின் நலனே நமது வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாகும். அமைதி, ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை, வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என்ற தத்துவம் ஆகியவை நமது வெளியுறவுக் கொள்கையின் தூண்களாகத் திகழ்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும், பரஸ்பர உறவுகளை வலுப்படுத்தவும் பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.
குளோபல் சவுத் எனப்படும் உலகின் தென்பகுதி நாடுகள் அல்லது வளரும் நாடுகளின் குழுவில் நாம் முக்கிய பங்காற்றி வருகிறோம். உலக அரங்கில் நமது நாட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்குமுறையை நாம் நம்புகிறோம். ஐ.நா சபையிலும் பிற பன்முக அமைப்புகளிலும் உலகளாவிய முக்கிய சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதே நமது முயற்சியாகும். நமது நாட்டின் இந்த முயற்சிக்கு பல நாடுகளிடமிருந்து வலுவான ஆதரவு கிடைத்து வருகிறது.
இயற்கை வளங்கள் மீது நம்மைப் போலவே வருங்கால சந்ததியினருக்கும் சமமான உரிமை உள்ளது. வருங்கால சந்ததியினர் இந்த உரிமையைப் பயன்படுத்துவதில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நமது செயல்பாடுகள் அமைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு இன்னும் செழிப்பான இயற்கை வளங்களை விட்டுச் செல்லும் வகையில் நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை நமது பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். சந்தாலி மொழியில் உள்ள ஒரு எளிய பாடல், இது தொடர்பான ஆழமான செய்தியைத் தாங்கி நிற்கிறது.
பண்டிட் ரகுநாத் முர்மு எழுதிய அந்தப் பாடலின் சில வரிகள் வருமாறு:
"தரே குஜுக் கான் ந்யெல் தே
மிரு சேனே ராக் பயாஹா தயா ஹயா கே.
குஜுக் கான் அப்போவாக் ஜதி தரம் தரே
சேதாக் பாபோன் ராக் பயாஹா அபோ அனா ந்யெல் தே."
என்பது அந்தப் பாடல். இப்பாடலில், ஒரு மரம் முற்றிலும் காய்ந்து போனதைக் கண்டு ஒரு கிளி ஆறாத் துயரத்துடன் அழுவதை கவிஞர் விவரிக்கிறார்.
அவர் கூறுகிறார்: “என் அன்பிற்குரிய சகோதரர்களே! இறந்துகொண்டிருக்கும் ஒரு மரத்தைக் கண்டு அந்தக் கிளி அழுகிறது. என் சகோதரர்களே! மனித கலாச்சாரமான மரம் அழிக்கப்படும்போது, மனிதர்களாகிய நாம் ஏன் துயரப்படுவதில்லை?”
இயற்கையையும் மனித விழுமியங்களையும் பாதுகாப்பதில் மக்கள் அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதே இப்பாடலின் செய்தியாகும். செழிப்பான, பசுமையான மரம் என்பது மனித சமூகத்தின் தார்மீக விழுமியங்கள், நல்வாழ்வு ஆகியவற்றின் அடையாளமாகும். தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும் இயக்கம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போன்ற முன்முயற்சிகளின் உணர்வோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் தனிப்பட்ட முறையிலும் கூட்டு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கல்வித் துறையில் நமது பெண் குழந்தைகள் மிகச் சிறப்பாகச் செயல்படுவதைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும் ட்ரோன் சகோதரிகள் திட்டம் முதல் விமானப்படையில் போர் விமானங்களின் தலைவராகப் பணியாற்றுபவர் வரை, பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
கிளாஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா வென்ற மொத்தம் 13 தங்கப் பதக்கங்களில் 8-ஐ பெண்கள் வென்றுள்ளனர். நமது பெண்கள் பொருளாதார ரீதியாகச் தற்சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அது வெற்றிகரமாக எட்டப்பட்டது. தற்போது, மேலும் 3 கோடி புதிய லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் இலக்கை நோக்கி நமது நாடு பயணித்து வருகிறது. முத்ரா வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தொழில்முனைவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்களாவர்.
பெண்களின் பொருளாதார தற்சார்புக்கான முயற்சிகளுடன், பல துறைகளிலும் அவர்கள் தலைமைப் பொறுப்புகளை வகிப்பதையும் நாம் காண்கிறோம். வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நமது ஜனநாயகத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். மக்களவையிலும், சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில், 2023-ம் ஆண்டில் 'நாரி சக்தி வந்தன் அதினியம்' எனப்படும் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் நோக்கங்களைச் செயல்படுத்துவது, தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கை அதிகரிப்பதோடு, நமது ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றும்.
நமது நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். இந்த இளைய சமுதாயமே நமது மிகவும் மதிப்புமிக்க சொத்து. நமது நாட்டின் இளைஞர்கள் திறமை மிக்கவர்கள், அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்கள், திறன் வாய்ந்தவர்கள். அடிமட்ட அளவில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் உருவாக்கும் புதுமையான, நடைமுறைக்கு ஏற்றத் தீர்வுகளை நான் கண்டுள்ளேன். இது சமூகத்தின் மீதும் நாட்டின் மீதும் நமது இளைஞர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. சராசரி வயது வெறும் 28 மட்டுமே கொண்ட இளைஞர் குழுவொன்று சமீபத்தில் வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவியதன் மூலம், விண்வெளி ஆய்வில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நமது இளைஞர்கள் பலர் சுயதொழில் பாதையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், வேலைவாய்ப்பை உருவாக்கும் கலாச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இளம் தொழில்முனைவோரின் பங்கேற்பு, நம் நாட்டில் வலுவான புத்தொழில் (ஸ்டார்ட் அப்) சூழல் அமைப்பை உருவாக்க வழிவகுத்துள்ளது. இந்திய இளைஞர்களின் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் ஈர்க்கப்பட்ட முக்கிய உலகளாவிய நிறுவனங்கள், அவர்களுக்குத் தலைமைத்துவப் பொறுப்புகளை வழங்குகின்றன. இத்தகைய இளம் சாதனையாளர்கள் உலகெங்கிலும் இந்திய இளைஞர் சக்தியின் நற்பெயரை மேலும் உயர்த்தியுள்ளனர். இந்தியாவின் பிரகாசமான, வளமான எதிர்காலத்தின் மீதான எனது நம்பிக்கையை நமது இளைய தலைமுறையினர் வலுப்படுத்துகிறார்கள்.
நமது மாணவர்களே இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசும் சமூகமும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமோ, அதேபோல நமது மாணவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்த, கூட்டு முயற்சிகள் மூலம் பங்களித்துச் செயல்பட வேண்டும்.
பொதுத் தேர்வுகள் நமது மாணவர்களுக்கான வாய்ப்புகளின் நுழைவாயில்களாக அமைகின்றன. இத்தேர்வுகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை முற்றிலுமாகத் தடுப்பதும், தேர்வு முறையை இளைஞர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதும் இச்சீர்திருத்தங்களின் நோக்கங்களாகும்.
அரசின் முன்முயற்சிகளாலும், வளர்ந்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் மூலமும், இளைஞர்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இத்தகைய புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நமது இளைஞர்கள் வெற்றியை நோக்கிய புதிய பாதைகளில் பயணிக்க முடியும்.
நமது இளைஞர்களின் உடல் நலம், மன நலம் ஆகியவை நாட்டின் எதிர்காலத்தின் அடித்தளமாக அமைகின்றன. இளைஞர்களை உற்சாகத்துடன் முன்னேறிச் செல்ல ஊக்குவிப்பதில் குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் பொறுப்பு உள்ளது.
இளைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நாட்டைக் கட்டமைப்பதற்கும் விளையாட்டு என்பது ஒரு ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது. 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ், உள்ளூர் அடித்தள நிலை முதல் தேசிய நிலை வரை நாடு முழுவதும் விளையாட்டுக்கான சிறந்த சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்க அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளைச் செய்து வருகிறது. இம்முயற்சிகள் நல்ல பலன்களைத் தந்து வருகின்றன.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளிலும், சாதனைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக நமது நாடு திகழ்ந்தாலும், முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
70 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 6 கோடி முதியவர்கள், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவச் சேவைகளைப் பெற முடியும். ஒட்டுமொத்தச் சமூகமும் முதியவர்களிடம் கனிவுடனும், அவர்களைத் தங்களில் ஒருவராகக் கருதும் உணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும். அத்துடன் அவர்களின் சுயமரியாதையையும் காக்க வேண்டும்.
உண்மையையும் நீதியையும் நிலைநாட்டவும், மனிதகுலத்திற்கு எதிரான சக்திகளை முறியடிக்கவும் கூடிய நமது பாரம்பரியத்தைக் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். ஜூலை 26 அன்று நாம் கார்கில் வெற்றி் தினத்தைக் கொண்டாடினோம். முன்னதாக, மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை நினைவு கூர்ந்தோம். அப்போது நமது ஆயுதப் படைகளின் இணையற்ற வீரத்தை நாம் போற்றி நினைவுகூர்ந்தோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, இந்திய ஆயுதப் படைகளின் துல்லியமாகச் செயல்படும் திறனை வெளிப்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கும் இது ஒரு தெளிவான, உறுதியான செய்தியை அளித்தது. அவர்கள் எங்கு சென்றிருந்தாலும், தங்கள் செயல்களுக்கான விளைவுகளைச் சந்தித்தே தீர வேண்டும். பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது, நமது நாட்டின் நலன் கருதி, குறிப்பாக விவசாயிகளின் நலன் கருதி எடுக்கப்பட்ட ஒரு உறுதியான நடவடிக்கையாகும்.
பல ஆண்டுகளாக, நக்ஸல் தீவிரவாதம் நாட்டிற்கு ஒரு பெரும் சவாலாக இருந்தது. இந்தியாவை நக்சலிசம் இல்லாத நாடாக மாற்றியது ஒரு முக்கிய சாதனையாகும். ஒரு காலத்தில் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று உற்சாகம் நிலவுகிறது. இப்பகுதிகளில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. 'பஸ்தார் ஒலிம்பிக்ஸ்' போட்டிகளில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பஸ்தார் பாண்டம் நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இவை அனைத்தையும் ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
நாட்டின் பெருமையைப் பாதுகாக்கும் வகையிலும், மராட்டிய ராணுவப் பாரம்பரியத்துடனும் தொடர்புடைய 12 கோட்டைகள் கடந்த ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. மேலும், இந்த ஆண்டு, பகவான் புத்தர் தனது முதல் போதனையை வழங்கிய இடமான சாரநாத், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒருபுறம், பகவான் புத்தருடன் தொடர்புடைய ஆன்மீகச் சின்னங்கள் பாரத பூமியில் உள்ளன. மறுபுறம், நமது பெருமையையும் உன்னதமான பாரம்பரியங்களையும் காப்பதற்கான நமது சிறப்பான திறனை வெளிப்படுத்தும் சின்னங்களும் இங்கு உள்ளன.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதே ஒவ்வொரு இந்தியரின் மேம்பாட்டுக்கும் நலனுக்குமான உண்மையான நோக்கமாகும். தெலுங்கு மொழியில் படைப்புகளை வழங்கிய சிறந்த தேசியவாத எழுத்தாளரான குருஜாதா அப்பாராவ், தமது பாடல் ஒன்றில் தேசபக்தி குறித்த காலத்தால் அழியாத ஒரு செய்தியை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்:
"தேசமுனு பிரேமிஞ்சுமன்னா
மஞ்சி அண்ணாடி பெண்சுமன்னா.
தேசமாந்தே மாட்டி காடோய்
தேசமந்தே மனுஷுலோய்."
இவ்வரிகளின் சாராம்சம் இதுதான்:
"நாட்டை நேசியுங்கள்,
நற்பண்புகளை வளருங்கள்.
நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல.
நாடு என்பது அங்குள்ள மக்கள் அனைவரையும் உள்ளடக்கியது."
சமூகத்தின் பங்கேற்பு மூலமும் அரசின் முயற்சிகள் மூலமும், இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் வாழும் மக்கள் ஆரோக்கியமானவர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும், வளமானவர்களாகவும் மாறுவார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
அனைவரையும் உள்ளடக்கிய நாட்டுப்பற்று உணர்வுடன், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கான இலக்கை எட்டுவதற்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம். ஜெய் ஹிந்த்!” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில் கூறினார்.