பாட்னா: பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மாற்ற வேண்டும் என்று பங்கிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜன சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.
பிஹாரைச் சேர்ந்த நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்தார்.
பங்கிபூர் எம்எல்ஏவான நிதின் நபினின் ராஜினமாவை அடுத்து அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், ஜன சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அவர் பாஜகவின் நீரஜ் குமாரைவிட 14,273 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “1995 முதல் பாஜக வசம் இருந்த நகர்ப்புற தொகுதி இது. நிதின் நபினின் தந்தை பல முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரைப் போலவே, அவரது மகனான நிதின் நபினும் பலமுறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 51,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் நிதின் நபின் வெற்றி பெற்ற ஒரு தொகுதியை பாஜக எப்படி இழந்தது? பாஜகவின் பிஹார் தலைமை மாறியதைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை.
பிஹார் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத ஒரு தலைமையை பாஜக வழங்கியுள்ளது. சாம்ராட் சவுத்ரியின் நடத்தை, குணம், முகம் ஆகியவை வாக்காளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பங்கிபூர் தேர்தல் முடிவு, பிஹாரின் முதல்வராக ஒரு சிறந்த நபரை நியமியுங்கள் என்ற செய்தியை பாஜக மற்றும் என்டிஏ-வுக்கு வழங்கியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுதல், சாதி அடையாளத்தை வைத்து மக்களை சுட்டுக்கொல்லுதல் போன்றவற்றுக்குப் பதிலாக, வேலைவாய்ப்பு, கல்வி சார்ந்த விவாதங்களே பிஹாருக்குத் தேவை.
குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை முதல்வராக நியமிப்பது, பிஹாரின் முன்னேற்றத்தைத் தடுக்கும். பாஜக மற்றும் என்டிஏவிடம் பெரும்பான்மை உள்ளது. அவர்களின் கூட்டணியைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார். நாங்கள் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன்வைக்கிறோம். திறமையான, நற்பண்புகள் கொண்ட ஒருவரை பிஹாரின் முதல்வராக நியமியுங்கள் என்பதே அது.
ஒரு காலத்தில் காட்டாட்சி முறைக்கு எதிராக பாஜக பிஹாரில் வாக்கு கோரியது. ஆனால், இப்போது பாஜகவும் அதே காட்டாட்சி முறையை பிரதிபலிக்கும் ஒரு தனிநபரை முன்னிறுத்தி உள்ளது.
பங்கிபூர் இடைத்தேர்தல் முடிவு பிரதமர் மோடிக்கு ஓர் எச்சரிக்கை மணி. ஒப்பந்தங்களை பெறுவதற்காக எம்எல்ஏவாக வேண்டும் என்பதல்ல எங்கள் நோக்கம். மாறாக, பிஹாரின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் இலக்கு.” என தெரிவித்தார்.