கோப்புப் படம்

 
இந்தியா

“வங்கதேசம், நேபாளம் போல இங்கே நடக்காது” - நேஹா போராவுக்கு பிரஹலாத் ஜோஷி பதிலடி

மோகன் கணபதி

புதுடெல்லி: வங்கதேசம், நேபாளத்தைப் போல இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இடதுசாரி மாணவர் அமைப்பான ஏஐஎஸ்ஐ-ன் தலைவர் நேஹா போரா, வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை அடுத்து அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டி, அது தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாகக் கூறி இருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைப் போல இந்தியாவில் நடக்க வாய்ப்பே இல்லை. வங்கதேசம் எங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது என்று நேஹா போரா கூறியுள்ளார். இதன் பொருள் என்ன?

வங்கதேசத்தில் என்ன நடந்தது? முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. பதவியில் இருந்த பிரதமர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்கள். இந்த மாதிரியான சூழலைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

இத்தகைய நபருடன் ராகுல் காந்தி தொடர்ந்து தொடர்பில் இருப்பது ஏன்? இந்த நாட்டில் என்ன நடக்க வேண்டும் என்று நங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டுவதற்குப் பதில், களப்பணியில் ராகுல் காந்தி தீவிர கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் முதல்வராகவோ, பிரதராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 49 ஆண்டுகளாக வெற்றி பெறவில்லை. அங்கு அப்போது பாஜக வலுவாக இல்லை. இருந்தும் நீங்கள் தோல்வி அடைந்தீர்கள். குஜராத்தில் 30 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசத்தில் 25 ஆண்டுகளாக நீங்கள் தொடர்ந்து தோற்று வருகிறீர்கள்.

பிஹாரில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறீர்கள். ஜார்க்கண்ட்டிலும் உங்களுக்கு அமைப்பு இல்லை. இவை அனைத்தும் பாஜகவின் எழுச்சிக்கு முன்பே நடந்தவை, மோடி பிரதமராகவதற்கு முன்பே நிகழ்ந்தவை. எனவே, தாங்கள் வெற்றி பெற முடியாததற்கு மோடிதான் காரணம் என கூறுவது முட்டாள்தனமான வாதம்.

எதிர்க்கட்சிகளின் சமீபத்திய போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என்பது அவர்கள் முன்வைக்கும் கருத்துகளை மக்கள் நிராகரிப்பதில் இருந்தே தெரிகிறது" என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT