கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், சிலிகுரி நகரில், இந்துக்கள் நடத்தும் கடைகளில் பிரியாணி, பூஜைப் பொருட்களை வாங்க வலியுறுத்தி, ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய இந்து ஜாகரண் மஞ்ச் அமைப்பு சுவரொட்டி ஒட்டியுள்ளது. துர்கா பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த சுவரொட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் உறுப்பினர் அபிஷேக் தாஸ் கூறுகையில், “இது கட்டளை அல்ல, ஓர் வேண்டுகோள் மட்டுமே. இந்துக்கள் நடத்தும் வணிக நிறுவனங்களுக்கு மக்கள் ஆதரவளித்தால், அது உள்ளூர் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார். இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தச் சுவரொட்டிகளை அகற்றுவதுடன், மதரீதியான பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.