புதுடெல்லி: இளம் தலைமுறையினருடன் இணைப்பில் நெருக்கமாக இருக்க இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட வேண்டுமென மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற சக அமைச்சர்களில் எத்தனை பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை ஆக்டிவாக பயன்படுத்தி வருவதாக பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தெரிகிறது. .
பெருவாரியான இளைய சமுதாயத்தினர் இன்ஸ்டாகிராம் தளத்தில் நேரம் செலவிடுவதை கருத்தில் கொண்டு அரசின் செயல்பாடு அதற்கு தகுந்த வகையில் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அரசின் திட்டங்கள் குறித்து வெறுமனே பதிவை மட்டும் பதிவிடாமல், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்களுடன் உரையாடவும் வேண்டும் என அமைச்சர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இளைஞர்களுடன் இணைப்பில் இருக்க இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிடுங்கள் என அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம், 2024-ல் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தபோது பிரதமர் மோடி இதனை கூறியிருக்கிறாராம்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் சிஜேபி போராட்டம் களம், இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் வலுப்பெற்றது இங்கே நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட மூன்று நிமிட வீடியோ செய்தியில் பேசிய பிரதமர் மோடி, “வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விஷயம் அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நமது முதன்மைப் பொறுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும்.
அதனால்தான் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை மிகக் குறைந்த காலத்தில் நடத்தி, கடந்த ஜூலை 19 அன்று முடிவுகளையும் வெளியிட்டோம். இத்தவறில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது. எனவே தான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
இந்த வரைவுச் சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது. வரும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
அதன் தொடர்ச்சியாக, தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.