கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வரும் 23, 29ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டத்தேர்தலுக்கான கடைசி கட்டப் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
முன்னதாக டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரியில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது: மேற்கு வங்கத்தில், வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் ஊடுருவியுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால், இங்கு ஊடுருவலை நிச்சயமாக தடுத்து நிறுத்துவோம். ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக மேற்கு வங்கத்தை மாற்றுவோம்.
அதேபோல் நிலங்களை அபகரிக்கும் மாபியா கும்பலையும் விரட்டுவோம். மேலும், புகழ் பெற்ற இரும்புத் தாது உற்பத்தியை மேம்படுத்தி மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்வோம். இதன் மூலம் இங்குள்ள வேலையற்ற இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்பைப் பெறுவர். மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள குல்டி பகுதிதான், நாட்டிலேயே அதிக இரும்புத் தாது உற்பத்தி மையமாக ஒரு காலத்தில் இருந்தது.
ஆனால் மம்தா ஆட்சிக்காலத்தில் குல்டி தனது புகழை இழந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் குல்டி பகுதியை இரும்புத்தாது உற்பத்தி மையமாக மாற்றுவோம். மேலும், இந்த மாநிலத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் பலதார திருமணங்கள் இன்னும் வழக்கத்திலேயே உள்ளது. அந்த சமூகத்தினர் 4 திருமணங்கள் வரை செய்து கொள்கின்றனர். இதனால் திருமணமான அந்தப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல தார மணத்தைத் தடை செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.