புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக சுவேந்து அதிகாரி (55) நேற்று பொறுப்பேற்றார். இவர், 1970-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரது குடும்பம், கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்தின் காந்த் பகுதியில் அரசியல் செல்வாக்கு மிக்கது. சுவந்துவின் தந்தை சிஷிர் அதிகாரி, தாயார் காயத்ரி அதிகாரி. கடந்த 2009 முதல் தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் எம்.பியாக இருந்தவர் சிஷிர். பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் இருந்தவர்.
அதன் மூலம் அரசியல் பாடங்களை வீட்டில் இருந்தே கற்றவர் சுவேந்து. கடந்த 1989-ல் கல்லூரியில் படிக்கும் போது, காங்கிரஸ் மாணவர் பேரவை மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 1995-ல், காந்த்தி நகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகி தலைவராகவும் பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் 1998-ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை (டிஎம்சி) மம்தா தொடங்கிய போது, அதிகாரி குடும்பத்தினர் அனைவருமே அதில் இணைந்தனர். கடந்த 2006-ல் சுவேந்து டிஎம்சி எம்எல்ஏவாக காந்த்தியின் தெற்கு தொகுதியில் தேர்வானார். 2009 மக்களவைத் தேர்தலில் தம்லுக் தொகுதியில் 1,72,000 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரி வேட்பாளரைச் சுவேந்து தோற்கடித்தார். நந்திகிராமில் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த இடதுசாரி அரசு எடுத்த முடிவை எதிர்த்து 2007-ல் போராட்டம் தொடங்கியது. இதில், தீவிரமாகப் பங்கேற்றது சுவேந்து அதிகாரியின் வாழ்க்கையில் திருப்புமுனையானது.
அவர் ‘பூமி உச்சேத் பிரதிரோத் சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கி நந்திகிராம் கிராமங்களில் விவசாயிகளைக் காக்கும் அரணாகச் செயல்பட்டார்.
இதனால் கடந்த 2011-ல் 34 ஆண்டு கால இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கு நந்திகிராம் போராட்டம் வழிவகுத்தது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுவேந்து, முதல்வர் மம்தா அரசில் அமைச்சரானார்.
மம்தா பானர்ஜியின் விசுவாசியாக இருந்தவருக்கு 2020-ல் கருத்து வேறுபாடு தொடங்கியது. அதன்பின் டிஎம்சியில் இருந்து விலகியவர், 2021-ல் பாஜகவில் இணைந்தார். 2021 தேர்தலில், மம்தா நந்திகிராமில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்த சுவேந்து வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து, மேற்கு வங்க மாநில பாஜகவின் முகமாக உருவெடுத்தார்.
பாஜகவை வெறும் 3 எம்எல்ஏக்களில் இருந்து 77 என உயர்த்தியவர் 2026 தேர்தலில் ஆட்சி அமையக் காரணமாகி விட்டார். சுவந்துவின் சகோதரர் சவுமேந்துக்கு, சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. ஆனால், சுவேந்து இன்னும் திருமணம் செய்யவில்லை.
இதுகுறித்து கேட்டால், ‘‘எனது பகுதியில் சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்கள் சதீஷ் சமந்த், சுஷில் தாரா மற்றும் அஜய் முகர்ஜி ஆகியோர் வழியில் நானும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையை அரசியலுக்கு அர்ப்பணித்துள்ளேன்’’ என்று உறுதியாகக் கூறினார். கடந்த 15 ஆண்டு கால மம்தாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் முறையாகப் பாஜக ஆட்சி அமைக்க சுவேந்துவின் பங்கு மிகப்பெரியது.