புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதைத் தடுத்ததில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியப் பங்காற்றினார் என்ற போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் விளாடிஸ்லா பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பார்டோசெவ்ஸ்கி கூறியதாவது: சர்வதேச அளவில் ரஷ்ய அதிபர் புதின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய மிகச் சில உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடியும் ஒருவர். மோடியின் கருத்துகளுக்கு ரஷ்ய அதிபர் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. இந்தப் போர் தீவிரமடைந்த நிலையில், அவ்வாண்டின் இறுதியில் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டதாக சர்வதேச அளவில் பரவலான அச்சம் நிலவியது.
இத்தகைய இக்கட்டான சூழலில்தான், போர் தீவிரமடைவதைத் தடுக்கப் பிரதமர் மோடி திரைமறைவில் முக்கிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.குறிப்பாக உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்தியதில் பிரதமர் மோடி ஆற்றிய பங்கை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, ரஷ்யா- உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.