இந்தியா

ரவுடியை மணமேடையில் கைது செய்த ம.பி. போலீஸார்

செய்திப்பிரிவு

போபால்: ம.பி. மாநிலம் போபாலை சேர்ந்தவர் ஆகாஷ் நீல்கந்த் (என்கிற) புரா. அப்பகுதியில் இவர் மீது கொலை, கொள்ளை, மிரட்டல், கடத்தல் உட்பட 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சீமாவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமானது. கடந்த 11ம் தேதி போபாலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த போலீஸார் திருமணக் கோலத்தில் இருந்த ஆகாஷை கைது செய்தனர்.

          

இதைப் பார்த்த மணமகள் சீமா கண்ணீர் மல்கக் கூறும்போது, “திருமணம் நடைபெறாவிட்டால் எனது வாழ்க்கை நாசமாகி விடும். இதில் எனது தவறு என்ன இருக்கிறது ? அவர் என்ன தவறு செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. 2 மணி நேரம் காத்திருந்து திருமணம் நடந்த பின்னர் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் காலில் விழுந்து கெஞ்சுகிறேன்" என்று கூறி போலீஸார் காலில் அவர் விழுந்து அழுதார்.

ஆனால் போலீஸாரோ, "ஆகாஷ் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர்கள் திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள். சட்ட விரோதத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவரை விட முடியாது" என்று தெரிவித்துவிட்டு ஆகாஷை அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து திருமணம் நின்றுபோனது.

SCROLL FOR NEXT