இந்தியா

“மக்களை பாதுகாக்க டீசல் விலை சுமையை மத்திய அரசே ஏற்றது” - பிரதமர் மோடி தகவல்

டெக்ஸ்டர்

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தபோதும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக லிட்டருக்கு ரூ.50 வரை உயர வேண்டிய டீசல் விலையில் ரூ.43-ஐ மத்திய அரசே ஏற்றுக்கொண்டு, வெறும் ரூ.7 மட்டுமே விலையேற்றம் செய்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியார் ஊடக நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 டாலரிலிருந்து 122 டாலராக உயர்ந்தபோது, இந்தியாவில் டீசல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.50 உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், ஆனால் சர்வதேச சந்தையின் அதிர்வுகளை முழுமையாக மக்கள் மீது சுமத்தக் கூடாது என்ற நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாடுகளில் இதே காலகட்டத்தில் டீசல் விலை 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்த நிலையில், இந்தியாவில் எரிபொருள் விலையுயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாதம் தோறும் ரூ.14,000 கோடி நிதிச் சுமையை ஏற்று வருவதாகப் பிரதமர் கூறினார்.

மேலும், விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யக் கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி கூறினார். சர்வதேச சந்தையில் சுமார் ரூ.5,000-க்கு விற்கப்படும் ஒரு மூட்டை டிஏபி உரம் இந்திய விவசாயிகளுக்கு ரூ.1,300-க்கும், சர்வதேச சந்தையில் ரூ.3,000-க்கு விற்கப்படும் ஒரு மூட்டை யூரியா ரூ.300-க்கும் குறைவான விலையில் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளின் மொத்த பட்ஜெட்டை விட ரூ.16 லட்சம் கோடி என்பது மிகப் பெரிய தொகை என்று குறிப்பிட்ட பிரதமர், விவசாய செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், மலிவு விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதும் தமது அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகத் தொடரும் என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT