இந்தியா

‘தைரியம் இல்லாததால் மக்களவைக்கு பிரதமர் மோடி வரவில்லை’ - காங். பெண் எம்.பி.க்கள்

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘மக்களவைக்கு வராமல் பிரதமர் மோடி இருந்ததற்கு, எங்களின் அச்சுறுத்தல் காரணம் அல்ல; எதிர்க்கட்சியை எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை’ என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜோதிமணி உள்பட காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் எழுதிய அந்தக் கடிதத்தில், “ஆளும் கட்சி வற்புறுத்தலின் பேரில், நீங்கள் எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மீது பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தது துரதிருஷ்டமானது. சுய அதிகாரத்துடன் நடந்து கொள்ளாமல், அரசு அறிவுறுத்தல்கள்படி நீங்கள் செயல்படுகிறீர்கள்.

          

8 எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு நீதி கேட்டு நாங்கள் உங்களை சந்தித்தபோது, தவறு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டு மாலை 4 மணிக்கு சந்திக்கும்படி எங்களிடம் கூறினீர்கள். அதன்பின்னர், இந்த விவகாரம் குறித்து அரசு பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்தீர்கள். இது சபாநாயகரின் அதிகாரத்தின் மீது பல கேள்விகளை எழுப்புகிறது.

ஆளுங்கட்சியின் நெருக்கடிக்கு மத்தியில் நீங்கள் பணியாற்றுவது தெளிவாகிறது. நாங்கள் பிரதமரை முற்றுகையிட முயன்றதாக குற்றம்சாட்டுவது, எங்கள் கவுரவம் மற்றும் நம்பகத்தன்மை மீதான தாக்குதல். பிரதமர் மோடி மக்களவைக்கு வராமல் இருந்ததற்கு, எங்களின் அச்சுறுத்தல் காரணம் அல்ல. எதிர்க்கட்சியை எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை. இந்த அச்சமே அவர் அவைக்கு வாராமல் இருந்ததற்கு காரணம்.

மக்களவையின் பாதுகாவலர் என்ற முறையில் நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திரமாக செயல்பட்டு, சபாநாயகர் பதவியின் மாண்பை காப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்று அந்தக் கடிதத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்ற வேண்டிய உரை ரத்து செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சிலர் பிரதமர் இருக்கை அருகே நின்று தகாத செயல்களில் ஈடுபடக் கூடும் என தகவல் கிடைத்ததால், அவைக்கு பிரதமர் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டேன்” விளக்கம் அளித்தார். இதற்கு சம்பந்தப்பட்ட காங்கிரஸ் பெண் எம்பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT