ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வரும் டிஜிபி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டுக்கு பிரதமர் மோடி நேற்று தலைமை தாங்கினார்.
அனைத்து மாநில டிஜிபி.க்கள் மற்றும் ஐ.ஜிக்கள் பங்கேற்கும் 60-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஐஐஎம் வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் தபன் குமார் தேகா, சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்றது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘ராய்ப்பூரில் நடைபெற்ற டிஜிபி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டின் முதல் நாளில் நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. காவல் துறையில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளையும், புதுமை கண்டுபிடிப்புகளையும் பகிர்ந்து கொள்ள இந்த மாநாடு மிகச்சிறந்த இடம்’’ என குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘நக்சல், வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை மோடி அரசு அளித்துள்ளது. நக்சல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. போதைப் பொருள் மற்றும் அனைத்து வகையான குற்றங்களை ஒழிக்க காவல்துறை முழு வீச்சில் செயல்பட வேண்டும். உளவுத் தகவல்கள் துல்லியமாக இருக்க வேண்டும். அனைத்து மாநில காவல்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காவல்துறையை நவீனமாக்க புதிய குற்ற சட்டங்களை பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.