ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான இந்து கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழிபாடு செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தில் முதல் நாடாக இந்தோனேசியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஜாவா தீவில் யோக்யகர்த்தாவில் உள்ள சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான பிரம்பானன் கோயிலுக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் பிரதமர் மோடி நேற்று சென்றார்.
இருவரும் கோயிலுக்கு ஹெலிகாப்டரில் செல்லும் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கோயிலுக்குள் அந்நாட்டு அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் சென்ற பிரதமர் மோடி, சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு, கோயில் அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர்.
பிரதமர் மோடியும் அதிபர் சுபியாந்தோவும் இந்த கோயில் பாரம்பரியச் சின்னத்தைப் பார்வையிட்டதுடன், கோயில் சீரமைப்புத் திட்டத்தையும் தொடங்கி வைத்தனர். சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளும் இந்த கோயிலில் எழுந்தருளியுள்ளனர்.
40 ஹெக்டேர் பரப்பில் 240 சன்னதிகளுடன் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இந்த கோயில், உலக கலாசார பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது இந்தோனேசிய நாட்டிலுள்ள மிகப்பெரிய இந்து கோயிலாகக் கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய கோயில் வளாகமாகவும் உள்ளது.
ஆஸ்திரேலியா சென்றார்
இந்தோனேசியாவில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியா சென்றடைந்தார். ஆஸ்திரேலியத் தலைநகர் மெல்பர்னில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உள்ளிட்டோரைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்குச் செல்லவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.