இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி/சியோல்: இந்தியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை வரும் 2030-க்குள் 5,000 கோடி டாலராக (சுமார் ரூ. 4.6 லட்சம் கோடி) இரட்டிப்பாக்க இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரிய அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். பிரதமர் மோடியுடன் அவர் நேற்று நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக இரு நாட்டு தலைவர்களும் அறிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அதிபர் லீ ஜே மியுங் கூறும்போது, ‘‘இரு நாடுகளின் பொதுவான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக முதன்முறையாக அமைச்சர் அளவிலான பொருளாதார ஒத்துழைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அணுமின் நிலையங்கள் மற்றும் பசுமை எரிசக்தி துறைகளில் முதலீடுகள் பலப்படுத்தப்படும்’’ என்றார். பிரதமர் மோடி பேசுகையில், ‘‘அதிபர் லீ-யின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போது 2,700 கோடி டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.4.6 லட்சம் கோடியாக உயர்த்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்ட நாம், அடுத்த பத்தாண்டு கால வெற்றிக்கான அடித்தளத்தை இன்று அமைத்துள்ளோம்’’ என்றார்.