

பெரம்பூர்: “உங்களோடு இருந்து உங்களுடன் பணியாற்றும் உங்கள் வீட்டு ஊழியனாக, உங்கள் தொண்டனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக பணியாற்றும் ஒருவன் வேண்டுமா? எங்கிருந்தோ புதிதாக அரசியலுக்கு வந்து அப்படிப்பட்ட ஒரு நாடகத்தை நடித்துக்கொண்டுவரும் அவர் வேண்டுமா? என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்” என்று பெரம்பூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: “சென்னையில் இருக்கும் எல்லாப் பகுதிகளும் எனக்கு அத்துப்படி. நான் மேயராக இருந்து, என்னென்ன பணிகள் எல்லாம் செய்தேன் என்று உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். சாலைப்பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் என்று ஏராளம். இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று எத்தனையோ மாநகராட்சிகள் இருக்கின்றன. மாநகராட்சி சார்பாக யாரும் பாலம் கட்டியதாக எங்கும் வரலாறு கிடையாது. ஆனால், நான் மேயராக இருந்தபோது சென்னை மாநகராட்சியில் ஏறக்குறைய 10 மேம்பாலங்களை கட்டிய பெருமை எனக்கு உண்டு.
உங்களுக்கு, உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். ஏனென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான். அந்தப் பாலங்கள் கட்டியதால் தான் இன்றைக்கு ஓரளவுக்கு போக்குவரத்து சீராக இருக்கிறது. அதனால்தான், நாம் ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் நான் முதலமைச்சராக வந்தபிறகு இப்போது, மாநகராட்சிகள் சார்பில், சுமார் 19 பாலங்கள், சிறுபாலங்கள் புதிதாக கட்டியிருக்கிறோம். இன்னும் பல பாலங்கள் கட்டிக் கொண்டு வருகிறோம். மெட்ரோ இரயில் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். அதெல்லாம் செய்திருக்கிறோம் என்ற உரிமையோடு இங்கு வந்திருக்கிறேன்.
அதிகமாக உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், நான் கேட்டுக் கொள்ள விரும்புவது உங்களோடு இருந்து உங்களுடன் பணியாற்றும் உங்கள் வீட்டு ஊழியனாக, உங்கள் தொண்டனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக பணியாற்றும் ஒருவன் வேண்டுமா? எங்கிருந்தோ புதிதாக அரசியலுக்கு வந்து அப்படிப்பட்ட ஒரு நாடகத்தை நடித்துக்கொண்டுவரும் அவர் வேண்டுமா? என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
அதுதான் நான் உங்களை கேட்கும் ஒரே கேள்வி. வேறு ஒன்றும் வேண்டாம். நான் யாரையும் அரசியலில் தாக்கியும் பேச விரும்பவில்லை. நான் யாரையும் எதிர்த்து மரியாதை இல்லாமல், தரக்குறைவாக பேசும் வழக்கம் எனக்கு கிடையாது. அதனால், நான் உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கெனவே, மேயராக இருந்து நான் ஆற்றியப் பணிகள் உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இப்போது, முதலமைச்சராக இருந்த இந்த 5 ஆண்டுகளில் ஆற்றிய பணிகளும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களின் 90 சதவீதப் பணிகளை நாம் முடித்திருக்கிறோம். இன்னும் 10 சதவீதப் பணிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. நான் இல்லையென்று மறுக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், ஒன்றிய அரசு நிதியும், அனுமதியும் தர மறுக்கிறது.
நான் உங்களிடத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது, இப்போது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் சரியாக உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு வருகிறது அல்லவா? இப்போது மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்தால் அதை உயர்த்தி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்கப் போகிறோம். அதேபோல், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம்- பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் நம்முடைய வீட்டுப் பெண்கள், ஆண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கி வருகிறோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதையும் உயர்த்தி ஆயிரத்து 500 ஆக கொடுக்கப் போகிறோம்.
அடுத்து, உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த திட்டம். இல்லத்தரசி திட்டம். இந்த திட்டத்தில் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுக்கப்போகிறோம். இதை வைத்து, நீங்கள் மகளிர் என்னப் பொருள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த பொருள்களான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் என்று என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். எங்கே வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் கலைஞருடைய மகன், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், ஆட்டோ வாங்க கடன் உதவிகள் என பெண்களுக்கான பல திட்டங்களை நாம் அறிவித்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அனுதினமும் கடுமையான வேலைகளை செய்யும் பெண்களுக்கு உரிமையைத் தர வேண்டும் என்பதற்காக தான் இந்த உரிமைத் தொகையை நான் அறிமுகப் படுத்தினேன். இதுதான் உண்மை.
இந்த திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். அதேபோல், பெண்களுக்காக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. எனவே, இந்த ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் வலு சேர்க்க வேண்டும். மீண்டும் இந்த ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும். அதற்காகதான் உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.