கோப்புப் படம்
புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த 1900 முதல் இயங்கி வரும் பாரம்பரியமிக்க தங்கம், வைர நகைக்கடை உம்மிடி ஜூவல்லர்ஸ். 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்நிறுவனத்தின் மூத்த குடும்ப உறுப்பினரான உம்மிடி எத்திராஜ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 99. அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய வரலாற்றின் மிக முக்கிய தருணம் ஒன்றுடன் தொடர்புடைய தனித்துவமான கைவினைஞரான உம்மிடி எத்திராஜின் மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது.
செங்கோலுடன் உம்மிடி எத்திராஜ்
செங்கோல் உருவாக்கத்தில் அவர் வெளிப்படுத்திய கைவினைத்திறன், இந்தியாவின் நாகரிக மரபில் அவருக்கு நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவரது படைப்புகள், இந்தியாவின் பாரம்பரியக் கலைகளின் மேன்மையை பறைசாற்றும் சான்றாகத் திகழ்கின்றன. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய நாகரிக மரபின் புனிதச் சின்னமான வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கிய உம்மிடி எத்திராஜின் மறைவு, மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது இந்த முயற்சி எப்போதும் மரியாதையுடனும் நன்றியுணர்வுடனும் நினைவுகூரப்படும்.
இந்தியாவின் வளமான ஆபரணக் கலை மரபைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பு, ஒரு நீடித்த பாரம்பரியமாக நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உம்மிடி எத்திராஜ் மறைவை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்த இவர், முன்னாள் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்தமைக்காக என்றும் நினைவுகூரப்படுவார்.
பல ஆண்டுகளுக்குப் பின்பு, 2023-ல், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அந்த செங்கோலுக்கு உரிய கவுரவத்தை வழங்கி சிறப்பிக்கும் வாய்ப்பு எங்கள் அரசுக்கு கிடைத்தது. அப்போது உம்மிடி எத்திராஜ் அவர்களை சந்தித்து, நமது நாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நன்றி தெரிவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவரது வாழ்க்கையும், கலைத்திறனும், இந்தியாவின் பெருமைமிக்க வளமான பாரம்பரியத்திற்கும் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கும் இடையிலான போற்றத்தக்க தொடர்பை பிரதிபலிக்கின்றன. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.” என தெரிவித்துள்ளார்.