புதுடெல்லி: நக்ஸலைட்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி இன்று தீபாவளியை கொண்டாட உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு, ஒரு காலத்தில் நக்ஸலைட்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் இன்று அவர் தீபாவளி கொண்டாடுகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், ‘தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, நமது வீரமிக்க பாதுகாப்புப் படையினர் இருக்கும் பஸ்தாருக்குச் செல்கிறேன்.
ஒரு காலத்தில் நக்சலிசம் ஆதிக்கம் செலுத்திய இந்தப் பகுதியில், இன்று வளர்ச்சி செழித்து வருகிறது.
நமது வீரமிக்க பாதுகாப்புப் படையினரின் தியாகங்கள், தன்னலமற்ற சேவை மற்றும் தேசத்தின் மீதான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் போற்றும் வகையில், அவர்களுக்கு எனது வணக்கத்தைச் செலுத்தச் செல்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தியில், ‘இந்த தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், நக்ஸலிசம் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாதம் வேரோடு பிடுங்கி எரியப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களும் இம்முறை தங்கள் பகுதிகளில் தீபாவளியன்று விளக்குகளை ஏற்றி பண்டிகையைக் கொண்டாடினர். சமீப காலங்களாக, மாவோயிஸ்டுகள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, வளர்ச்சி நீரோட்டத்தில் இணைந்து நமது நாட்டின் அரசியலமைப்பின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதைக் கண்டோம். இது நாட்டுக்கு மிகப் பெரிய சாதனை.' என தெரிவித்திருந்தார்.
மத்திய ரிசர்வ் காவல்படை (சிஆர்பிஎப்) தனது வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கடந்த ஓராண்டு காலமாக உயிரிழப்புகள் ஏதும் இன்றி தனது கடமைகளைச் செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதிதான் கடைசி உயிரிழப்பு நிகழ்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மைல்கல்லை எட்டியதற்காக பிரதமர் மோடி, சிஆர்பிஎப்க்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.
அவர் தனது பாராட்டுச் செய்தியில், ‘பஸ்தர் பிராந்தியத்தில் நக்ஸலிசத்தை வேரறுப்பதில் சிஆர்பிஎப் முன்னணியில் இருந்து செயல்பட்டு வருகிறது. பஸ்தரைப் பொறுத்தவரை, நீண்டகாலமாக வளர்ச்சியைக் குலைக்கும் ஒரு பெரும் தடையாக நக்ஸசிலசம் இருந்து வந்தது. தற்போது அமைதியும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருவதால், கல்வி, சுகாதாரம், சாலை வசதி, மின்சாரம், தகவல் தொடர்பு, சுற்றுலா, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் வளர்ச்சிப் பணிகள் புதிய வேகத்தைப் பெறும் என தெரிவித்திருந்தார்.’ என்பது குறிப்பிடத்தக்கது.