இந்தியா

“பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக நாம் சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும்” - பிரதமர் மோடி

மோகன் கணபதி

புதுடெல்லி: 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க, பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சின்மயா மிஷன் சார்பில், சின்மய அமிர்த மகோத்சவ சர்வதேச மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இதனை தொடக்கிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாம் அழியாமையின் குழந்தைகள் (வயம் அமிர்தஸ்ய புத்ரா) என்று உபநிடதங்கள் கூறுகின்றன. இது வெறும் ஆன்மிக தத்துவம் மட்டுமல்ல. இது நமது கலாச்சார நம்பிக்கையும்கூட. இதன் பொருள், நமது உடல் அழியாதது என்பதல்ல; நமது உணர்வு நிலை அழியாதது என்பதே.

இந்த வழிப்புணர்வின் காரணமாகவே இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாமல் நிலைத்திருக்கிறது. இந்தியா என்ற சொல்லுக்கு, அறிவையும் ஒளியையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தேசம் என்று பொருள். நாட்டின் நலனை விரும்பும் நாம் அனைவரும் விழித்தெழுந்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

சுவாமி சின்மயானந்தர் தனது வாழ்நாள் முழுவதையும் இந்த மந்திரத்தையே தனது கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தார். ஆன்மிக விஷயங்களைப் பற்றி அவர் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் பேசினாரோ, அதே அளவு ஆர்வத்துடன் தேசம் தொடர்பாகவும் உரையாற்றினார். ஏனெனில், நமது தேசம்தான் நமது கலாச்சாரத்தின் பிறப்பிடம். இந்த தேசமே நமது இருப்பின் அடித்தளம்.

சின்மய மிஷனின் முயற்சிகளால் இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவின் கலாச்சாரத் தூதுவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த இளைஞர்கள் இந்திய விழுமியங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கின்றனர்.

புதிய இந்தியாவின் விருப்பங்களுக்கு ஏற்ப நமது கல்வி முறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினோம். இந்த தேசிய கல்விக் கொள்கையானது, இந்தியாவின் ஞானப் பாரம்பரியம், தாய்மொழிக் கல்வி, நவீன அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நாட்டின் அனைத்து திசைகளிலும் இந்தியாவின் கலாச்சார மையங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதை காண முடிகிறது. காசி விஸ்வநாதர் கோயில், அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் ஆலயம், உஜ்ஜெய்னி மகாகாலேஸ்வரர் கோயில் போன்றவை இதற்கு உதாரணங்களாக உள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவின் கலைப்பொருட்கள் மற்றும் சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டன. இதை தடுப்பதற்கு யாரும் இருக்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் திருடப்பட்ட 650-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த சில தசாப்தங்களாக காலம் மாறியுள்ளது. நாட்டின் முன் புதிய சவால்கள் எழுந்துள்ளன. சமூகத்தில் புதிய சிதைவுகளும் குறைபாடுகளும் தோன்றியுள்ளன. இன்று இவற்றைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உரியது.

நம்மைப் பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக நாம் சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும். நமது சக குடிமக்களை சுய சார்பு நிலையை நோக்கி விழித்தெழச் செய்ய வேண்டும். 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி ஒவ்வொரு தனிமனிதரையும் நாம் இணைக்க வேண்டும். இந்த நோக்கங்களை அடைவதற்கு நாம் இன்னும் கூடுதல் முனைப்புடன் செயல்பட வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT