புதுடெல்லி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை தோற்கடித்து காங்கிரஸ், திமுக, திரிணமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஒரு நல்ல முயற்சியை கருவிலேயே அழித்துவிட்டன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துதற்காக அரசியல் சாசனத் திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த 16-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026 மீது மக்களவையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, மற்ற 2 மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
மன்னிப்பு கோருகிறேன்: இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறியதாவது: நமது நாட்டின் மகள்கள், சகோதரிகளிடம் பேச வந்துள்ளேன். மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
அதற்காக அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்டகட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக நமது பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். மசோதா தோல்வி அடைந்தபோது நான் சோகத்தில் ஆழ்ந்தேன். ஆனால், அந்த கட்சிகளின் எம்.பி.க்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
மேஜைகளை தட்டி ஆர்ப்பரித்தனர். அவர்களது நடவடிக்கைகள், பெண்களின் சுயமரியாதை மீதான நேரடிதாக்குதல். இதை இந்திய பெண்கள் மறக்க மாட்டார்கள். இது அவர்களிடம் நீங்காத வடுவைஏற்படுத்தியுள்ளது. இந்த கட்சியினர் தங்களது தொகுதிக்கு செல்லும்போது, அவர்களது நாடாளுமன்ற செயல்பாடுதான் பெண்களின் மனதில் நிழலாடும்.
மசோதாவை தோற்கடித்தவர்கள் பெண்களின் சக்தியை சாதாரணமாக எடை போட்டுவிட்டனர். இதன்மூலம் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவத்தை இழைத்துள்ளனர். அதற்கான தண்டனையை பெண்கள் வழங்குவார்கள். மக்களின் தண்டனையில் இருந்து எதிர்க்கட்சிகள் தப்பிக்க முடியாது. வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு விரும்பியது. வடக்கு,தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பிராந்தியங்களிலும் ஆட்சி, அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய மசோதா கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசின் உன்னதமான நோக்கத்தை காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் சீர்குலைத்துவிட்டன. பெண்களின் உரிமைகளை பறித்துவிட்டன.
மகளிர் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் வெறுக்கிறது. இதன்காரணமாக இதுதொடர்பான மசோதாக்களை அந்த கட்சி தொடர்ச்சியாக தடுத்து வருகிறது. இப்போதும் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளானதிமுக, திரிணமூல், சமாஜ்வாதிஉள்ளிட்டவையும் மசோதாவை தோற்கடித்து விட்டன. இதன்மூலம் ஒரு நல்ல முயற்சியை கருவிலேயே அழித்துவிட்டனர்.
மக்களிடம் தவறான தகவல்களை காங்கிரஸ் தலைவர்கள் பரப்பி வருகின்றனர். ஆனால் அவர்களது முகமூடி தற்போது கிழிந்துவிட்டது. அவர்களின் உண்மையான முகம் மக்களுக்கு அம்பலமாகி உள்ளது. பல ஆண்டு தவறை திருத்திக் கொள்ளும்படி காங்கிரஸிடம் மன்றாடினேன். ஆனால் அவர்கள் தவறை திருத்திக் கொள்ளவில்லை.
தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மறைந்துவிட்டது. எனினும் சில பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் ஒட்டுண்ணி போல காங்கிரஸ் பிழைப்பு நடத்துகிறது. காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் வாரிசு அரசியலை பின்பற்றி வருகின்றன. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் வாரிசு அரசியல் பாதிக்கப்படும்.
தங்களின் கட்சிகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கான மசோதாவை தோற்கடித்து உள்ளன. அவர்களின் தீய எண்ணத்தை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். நாட்டுக்கு சேவையாற்ற இந்தியப் பெண்கள் தயாராக உள்ளனர். ஆனால் வாரிசு அரசியல் தலைவர்கள், பெண்களின் வளர்ச்சியை விரும்பவில்லை. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் பெண்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கும் என்று அஞ்சுகின்றனர். காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் செய்த மாபாதகத்தை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக நாட்டில் பிரிவினையைத் தூண்ட காங்கிரஸ் முயற்சி செய்கிறது. சில மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தால் மேற்குவங்கம், உத்தர பிரதேசம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதி எண்ணிக்கை அதிகரித்திருக்கும். நல்ல வாய்ப்பை திமுக தட்டிக் கழித்துவிட்டது.
பெண்கள் பாடம் கற்பிப்பார்கள்: புதிய சீர்திருத்தங்களை அமல்செய்யும்போது எதிர்ப்பு தெரிவிப்பது காங்கிரஸின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த கட்சியின் எதிர்மறை செயல்பாடுகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மசோதா நிறைவேறினால்,அதற்கான நற்பெயரை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குகிறேன்என நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தேன். ஆனால் மகளிர் முன்னேற்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாவை தோற்கடித்த காங்கிரஸுக்கு பெண்கள் பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.
தடைகளைத் தகர்ப்போம் என உறுதி: மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் 66 சதவீத வாக்குகள் தேவைப்பட்டன. அந்த வாக்குகளைப் பெற முடியவில்லை.
ஆனால், நாட்டின் 100 சதவீத பெண்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளோம். மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்த தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவோம்.
நாடாளுமன்றத்துக்கு பெண்கள் வருவதை எதிர்க்கட்சிகளால் தடுக்கமுடியாது. மசோதாவுக்கு எங்களால் போதிய வாக்குகளைப் பெற முடியவில்லை. ஆனால், சரியான நேரத்துக்கு காத்திருக்கிறோம். காலம் கனியும்போது இந்தியப் பெண்களின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.