கோப்புப் படம்
புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும். தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப். 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஈரான் ராணுவ, அணுசக்தி தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், எண்ணெய் வயல்கள் என 8,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,444 ஈரான் நாட்டினர் உயிரிழந்துள்ளனர். 18,551 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 20 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 3,730 பேர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 158 பேர் காயமடைந்திருக்கின்றனர். ஈரான் ராணுவத் தாக்குதலில் சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாகப் பாதித்துள்ளன.
போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கியது. இதனால் ஆசிய நாடுகளுக்கான 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, எல்பிஜி, எல்என்ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்து வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் நேரடியாக போரில் இறங்கவில்லை என்றாலும் அமெரிக்காவுக்கு மறைமுக ஆதரவு தருகின்றன.
இந்தச் சூழலில் நடுநிலையான உலகத் தலைவர்கள் இதில் தலையிட்டு சமரச பேச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரி கர்னல் டக்ளஸ் மெக்கிரிகோர் கூறும் போது,போரை நிறுத்த இருதரப்பிலும் சமரசம் பேச இந்திய பிரதமரால் மட்டுமே முடியும்.ராணுவ, அரசியல்ரீதியாக உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. பிரதமர் மோடி அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்றார். ஐரோப்பிய, வளைகுடா நாடுகளின் தலைவர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த 18-ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், குவைத் இளவரசர் ஷேக் சபா அல் காலித் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். கடந்த 19-ம் தேதி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.
இதனிடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் பெல்ஜியம் சென்று அங்கு ஐரோப்பிய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் அமைச்சர்களுடன் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு ரமலான் மற்றும் ஈரான் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்த பண்டிகை காலத்தில் மேற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, ஒளிமயமான எதிர்காலம் அமைய இருவரும் விரும்புகிறோம்.
பிராந்தியத்தின் முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சர்வதேச விநியோக சங்கிலி அறுபட்டிருக்கிறது. இதனால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. தடையற்ற கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அந்த நாட்டு அரசுதொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கிறது. அதற்காக நன்றி தெரிவித்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா, ஈரான் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்திய பிரதமர் மோடி தீவிர முயற்சிசெய்து வருகிறார். தற்போதைய சூழலில் சில நேர்மறையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை அமெரிக்கா ஒரு மாதத்துக்கு நீக்கியிருக்கிறது. மேலும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை கைவிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி மட்டுமின்றி, உலக நாடுகளும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுக்கு அதிக அழுத்தம் தர வேண்டும். அப்போதுதான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்றனர்.