இந்தியா

“இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை” - பிரதமர் மோடி சாடல்

டெக்ஸ்டர்

புதுடெல்லி: நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை சிலரால்  சகித்துக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “'நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியா எட்டியுள்ள 7.8 சதவீதப் பொருளாதார வளர்ச்சி நாட்டின் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது. 

மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் மற்றும் உலகளாவிய வர்த்தகப் பாதிப்புகளுக்கு இடையிலும் இந்தியா இந்த அளப்பரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒருகாலத்தில் இந்தியாவை பலவீனமான ஐந்து நாடுகளின் பட்டியலுக்குத் தள்ளி அவப்பெயர் பெற்றவர்களால், தற்போதைய இந்த வளர்ச்சி புள்ளிவிவரங்களைச் சகித்துக்கொள்ளவோ அல்லது செரித்துக்கொள்ளவோ முடியவில்லை.

கடந்த 2013-ஆம் ஆண்டில் நான் இதே கல்லூரிக்கு வந்தபோது அரைகுறை மனநிலை கொண்டவர்கள் பற்றி பேசியிருந்தேன். இன்றும் சிலர் நாட்டின் வளர்ச்சியை அதே எதிர்மறைப் பார்வையுடன்தான் அணுகுகிறார்கள். அவர்களுக்கு எப்போதும் இந்த நாடு வளர்ச்சி பெறாதது போலவே தோன்றும். 

ஆனால், உண்மை உரக்கப் பேசும்போது பொய்களின் சலசலப்பு தானாகவே அடங்கிவிடும். 2013-ல் பலவீனமான நாடாகப் பார்க்கப்பட்ட இந்தியா, இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணிப் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளதை உலகமே வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 12 ஆண்டுகளில் 'பிரதமரின் ஜன் தன் யோஜனா' திட்டத்தின் மூலம் சுமார் 60 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்கள் நாட்டின் நிதி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

மக்கள் எப்போதும் தங்களையே சார்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு முன்பாக நான் பாறை போல் உறுதியாக நிற்கிறேன். 2014-ல் வெளிநாடுகளிலிருந்து மொபைல் போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இன்று 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் பிராண்ட் மதிப்பை உயர்த்தியுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தையும் தேவையின்றி எதிர்ப்பவர்கள் எப்போதும் அதிருப்தியில் இருக்கும் உறவினர் போன்றவர்கள். யுபிஐ, அதிவேக ரயில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் என நாட்டின் எந்தவொரு நன்மையை நோக்கிய முயற்சியையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT