கோப்புப் படம்

 
இந்தியா

“சென்னையில் திறமைசாலிகளைச் சந்தித்தேன்” - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்த மாதத் தொடக்கத்தில் சென்னை சென்றிருந்தேன். அங்கே ஏராளமான விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், இளம் திறமைசாலிகளைச் சந்தித்தேன். ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றக் கூடிய துறைகளில் இந்திய இளைஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு துறைதான் மூளை ஆராய்ச்சி ஆகும்.

சென்னை ஐஐடி வளாகத்தில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தேன். இந்த மையத்தில் மூளை வரைபடத் தொழில்நுட்ப தளம் உருவாக்கப்பட்டு ஒட்டுமொத்த உலகத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இன்று வரை மனித மூளை, அறிவியல் புதிராகவே நீடிக்கிறது. முதுமையில் ஏற்படும் அல்சைமர், டிமென்ஷியா நோய்களுக்கு முறையான சிகிச்சை இல்லை. சென்னையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியால் இதுபோன்ற நோய்களுக்கு வருங்காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் பயணத்தில் ஸ்டார்ட் அப் நிறுவன இளைஞர்களுடன் உரையாடினேன். அதில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், தங்கத்தின் தரத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. மற்றொரு ஸ்டார்ட் அப் நிறுவனம், டிஜிட்டல் மோசடியில் இழந்த பணத்தை விரைந்து மீட்பது குறித்த தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ஆராய்ச்சி, கடலுக்கு மேல் நீண்ட தொலைவு பறக்கும் ட்ரோன், மின் வாகனங்களுக்கான அதிநவீன பேட்டரி, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது என பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT