இந்தியா

“ஏழைகள் மரணமும், மோடியின் மவுனமும்...” - இந்தூர் துயரம் குறித்து ராகுல் விமர்சனம்

வெற்றி மயிலோன்

இந்தூர்: இந்தூரில் அசுத்தமான குடிநீர் அருந்தி 14 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, “ஏழைகள் இறக்கும்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தூரில் விநியோகிக்கப்பட்டது தண்ணீர் அல்ல, விஷம். ஆனால் அரசு நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.

ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் சூழ்ந்துள்ளது. ஏழைகள் உதவியற்ற நிலையில் உள்ளனர். அதற்கும் மேலாக, பாஜக தலைவர்கள் ஆணவமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். தங்கள் உயிரையும், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டது; அரசாங்கமோ ஆணவத்தை வழங்கியது.

அசுத்தமான, துர்நாற்றம் வீசும் தண்ணீர் குறித்து மக்கள் மீண்டும் மீண்டும் புகார் செய்தபோதும், அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீரில் கழிவுநீர் எவ்வாறு கலந்தது? சரியான நேரத்தில் கழிவுநீர் விநியோகம் ஏன் நிறுத்தப்படவில்லை? இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

இவை அற்பமான கேள்விகள் அல்ல, இவை பொறுப்புக்கூறலைக் கோருகின்றன. சுத்தமான நீர் என்பது ஒரு சலுகை அல்ல, அது வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமையை அழித்ததற்கு பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம், அதன் அலட்சியமான நிர்வாகம் மற்றும் உணர்வற்ற தலைமை மட்டுமே முழுப் பொறுப்பு.

மத்தியப் பிரதேசம் இப்போது மோசமான ஆட்சியின் மையமாக மாறிவிட்டது. இருமல் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள், அரசு மருத்துவமனைகளில் எலிகள் குழந்தைகளைக் கொல்வது, இப்போது கழிவுநீர் கலந்த தண்ணீரைக் குடித்ததால் ஏற்படும் மரணங்கள். ஆனால், ஏழைகள் இறக்கும்போதெல்லாம், பிரதமர் மோடி வழக்கம் போல் மவுனமாக இருக்கிறார்" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இந்தூரில் நடந்தது என்ன? - மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்​தூரில் உள்ள பாகீரத்​புரா பகு​தி​யில் ஒரு பொதுக் கழிப்​பறைக்கு அடி​யில் சென்ற குடிநீர் குழா​யில் கசிவு ஏற்​பட்​ட​தில் குடிநீருடன் கழி​வுநீர் கலந்​துள்​ளது. இந்த தண்​ணீரை குடித்த பலருக்கு வாந்தி மற்​றும் வயிற்​றுப்​போக்கு ஏற்​பட்​டு, பல்​வேறு மருத்​து​வ​மனை​களில் அனுமதிக்கப்​பட்​டனர். இந்​தி​யா​வின் தூய்​மை​யான நகர​மாக இந்​தூர் தொடர்ந்து தேர்வு செய்​யப்​பட்டு வரும் நிலை​யில், அங்கு நடை​பெற்ற இந்தச் சம்​பவம் அதிர்ச்சி மற்​றும் கவலையை ஏற்​படுத்​தி​யது.

இது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறும்போது, “இந்​தப் பிரச்​சினை​யில் இரண்டு, மூன்று நாட்​களில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. 40,000-க்கு மேற்​பட்​டோருக்கு மருத்​து​வப் பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது” என்றார். இந்தத் துயர சம்​பவத்​தில் 6 மாத குழந்தை உட்பட இது​வரை 14 பேர் இறந்​துள்​ள​தாக உள்​ளூர் மக்கள் தெரி​வித்​தனர். இதற்​கிடை​யில், பாகீரத்​பு​ரா​வில் குடிநீர் குழா​யில் ஏற்​பட்ட கசிவு சரிசெய்​யப்​பட்டு குடிநீர் விநி​யோகம் மீண்​டும் தொடங்​கி​யுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT